நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்; எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்யாது, விவாதம் நடத்துவோம்: ஜெய்ராம் ரமேஷ்
|நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்யும்போது, பா.ஜ.க. ஒரு சார்பு முடிவை எடுத்து விடும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் வருகிற 18-ந்தேதி தொடங்கி 22-ந்தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை நாடாளுமன்ற விவகார மந்திரி பிரகலாத் ஜோஷி வெளியிட்டார்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் இன்று கூறும்போது, நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரின்போது, எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்யாது. அப்படி செய்யும்போது, பா.ஜ.க. ஒரு பக்க முடிவை எடுத்து விடும் என கூறியுள்ளார்.
முக்கிய விவகாரங்கள் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும். அதனை நாங்கள் முன்வைப்போம் என்று பேசியுள்ளார்.
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடருக்கான நோக்கம் பற்றி தெரிய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இதுபற்றி காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற கட்சி தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மோடிக்கு பல்வேறு விவகாரங்கள் பற்றி ஆலோசனை நடத்த வேண்டும் மற்றும் விவாதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து கடிதம் ஒன்றை எழுதினார்.
பிற அரசியல் கட்சிகளிடம் ஆலோசிக்காமல் இந்த கூட்டத்தொடர் நடத்தப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
எனினும், இந்த கடிதத்திற்கு மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி கூறும்போது, எங்களுடைய நாடாளுமன்ற பணியை நீங்கள் அரசியலாக்குகின்றீர்கள். எந்தவித சர்ச்சையும் இல்லாதபோது, தேவையற்ற முறையில் விவகாரங்களை கிளப்பி கொண்டு இருக்கிறீர்கள் என பதிலளித்து உள்ளார்.