திருவாபரணம் அணிவித்து அய்யப்பனுக்கு சிறப்பு தீபாராதனை: சபரிமலையில் மகரஜோதி தரிசனம்
|சபரிமலையில் மகரஜோதி தரிசன நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சரணகோஷம் எழுப்பி பரவசம் அடைந்தனர்.
கட்டுக்கடங்காத கூட்டம்
பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் மாத பூஜை தவிர ஒவ்வொரு ஆண்டும் 60 நாட்கள் நடைபெறும் மண்டல, மகரவிளக்கு சீசன் மிகவும் சிறப்பு வாய்ந்தது. நடப்பு ஆண்டின் மண்டல கால பூஜை கடந்த மாதம் 27-ந் தேதியுடன் முடிவடைந்தது. பின்னர் மகர விளக்கு பூஜைக்காக 30-ந் தேதி அன்று கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டது.
மண்டல காலத்தை போன்றே மகரவிளக்கு கால பூஜையிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 2 வருடங்களுக்குப் பின் கொரோனா கட்டுப்பாட்டை நீக்கியதை தொடர்ந்து அய்யப்பனை தரிசிக்க கட்டுக்கடங்காத கூட்டம் வந்தவண்ணம் உள்ளது. தினமும் லட்சம் பக்தர்கள் திரண்டதால் சபரிமலையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
லட்சக்கணக்கானபக்தர்கள் குவிந்தனர்
மகர விளக்கையொட்டி தினமும் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், நெய்யபிஷேகம் உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெற்று வந்தன.
விழாவின் சிகர நிகழ்ச்சியான மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் நேற்று மாலை நடைபெற்றது. இதனை காண லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை சுற்றுவட்டார பகுதியில் குவிந்தனர்.
மகர ஜோதி தரிசனம்
மகர விளக்கு பூஜையின்போது அய்யப்பனுக்கு பந்தளம் மன்னர் வழங்கிய திருவாபரணம் அணிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி கடந்த 12-ந் தேதி பந்தளம் கோவிலில் இருந்து திருவாபரண பெட்டி ஊர்வலம் புறப்பட்டது. தலைச்சுமையாக திருவாபரண பெட்டி கொண்டு வரப்பட்டது. நேற்று மாலை 5.30 மணிக்கு சரம்குத்தி பகுதியில் ஊர்வலம் சென்றடைந்தபோது திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் வரவேற்பு அளித்து திருவாபரண ெ பட்டி பெற்றுக்கொள்ளப்பட்டு கோவில் தந்திரி கண்டரரு ராஜீவரு மற்றும் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மாலை 6.30 மணிக்கு திருவாபரணங்கள் அய்யப்பனுக்கு அணிவிக்கப்பட்டு மகர விளக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. அதன்பிறகு சற்று நேரத்தில் 6.45 மணிக்கு மகர நட்சத்திரம் ஜொலிக்க பொன்னம்பல மேட்டில் 3 முறை ஜோதி தெரிந்தது.
சரண கோஷம் விண்ணதிர்ந்தது
அப்போது ஜோதி தரிசனத்தை கண்டு, சபரிமலையை சுற்றியுள்ள பகுதிகளில் முகாமிட்டிருந்த பக்தர்கள் சாமியே சரணம் அய்யப்பா என்று விண்ணதிர கோஷம் முழங்கி பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். இந்த அய்யப்ப கோஷம் விண்ணதிரும் வகையில் இருந்தது.