நிலவில் 'விக்ரம் லேண்டர்' தரையிறங்குவதை காண பெங்களூருவில் சிறப்பு ஏற்பாடு
|நிலவில் ‘விக்ரம் லேண்டர்’ தரையிறங்குவதை காண பெங்களூருவில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு-
நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக 'சந்திரயான்-3' விண்கலத்தை இந்தியா விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்தது. இந்த விண்கலம் எல்.வி.எம்.3 ராக்கெட் மூலம் கடந்த மாதம் (ஜூலை) 14-ந்தேதி விண்ணில் ஏவப்பட்டது. அதன்பின்னர் புவி சுற்றுவட்ட பாதையில் பூமியை சுற்றிவந்த 'சந்திரயான்-3' கடந்த 1-ந்தேதி நிலவை நோக்கி பயணத்தை தொடங்கியது.
5 நாட்கள் பயணத்துக்கு பிறகு கடந்த 5-ந்தேதி நிலவின் சுற்றுவட்ட பாதைக்குள் 'சந்திரயான்-3' நுழைந்தது. அதன்பிறகு, சுற்றுப்பாதையின் உயரம் படிப்படியாக குறைக்கப்பட்டு நிலவுக்கு அருகே 'சந்திரயான்-3' கொண்டு வரப்பட்டது. பின்னர் சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து 'விக்ரம் லேண்டர்' தனியாக பிரிக்கப்பட்டது.
40 நாள் தொடர் பயணத்தின் நிறைவு நிகழ்வாக லேண்டரை நிலவில் தரையிறக்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த லேண்டர் நாளை(புதன்கிழமை) மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவத்தில் தரையிறங்க உள்ளது.
இந்த நிலையில், லேண்டர் கருவி நிலவில் தரையிறங்குவதை காண பெங்களூருவில் உள்ள ஜவஹர்லால் நேரு கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கு பெரிய திரையில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதாவது நாளை மாலை 5 மணி முதல் மாலை 6.30 மணி வரை பொதுமக்கள் பெரிய திரையில் லேண்டர் தரையிறங்குவதை காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நேரடி ஒளிபரப்புடன் அங்கு விஞ்ஞானிகளின் விளக்க நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.