சபாநாயகர் பதவிக்கு ஆதரவு; ஆனால்... - ராகுல் நிபந்தனை
|மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லாவை மீண்டும் முன்னிறுத்த பா.ஜ.க. திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,
நாடாளுமன்றத்தின் 18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று பிரதமர் மோடி உள்பட உறுப்பினர்கள் பலர் எம்.பி.யாக பதவியேற்றனர். எஞ்சிய உறுப்பினர்கள் பதவியேற்பு இன்று நடைபெறவுள்ளது.
இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
மக்களவை துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு வழங்குவது தான் மரபு என ராஜ்நாத் சிங்கிடம் தெரிவித்துள்ளோம். மக்களவை துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுகு வழங்குவதாக இருந்தால் சபாநாயகர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிறுத்தும் வேட்பாளருக்கு ஆதரவளிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் மக்களவை சபாநாயகரை எதிர்க்கட்சிகள் உட்பட அனைவரின் ஒருமித்த ஆதரவுடன் தேர்வு செய்ய தேசிய ஜனநாயக கூட்டணி திட்டமிட்டுள்ளது. துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு வழங்க கோரினோம். ஆனால் எந்த பதிலும் வரவில்லை. பிரதமர் மோடி ஆக்கப்பூர்வமான விவாதத்தை விரும்பவில்லை என்றும் ராகுல் காந்தி கூறினார்.
மக்களவை சபாநாயகர் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லாவையே மீண்டும் முன்னிறுத்த பாஜக திட்டமிட்டுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியும், ஓம் பிர்லாவும் சந்தித்துள்ளனர். சபாநாயகர் தேர்தலில் போட்டியிட ஓம் பிர்லா சற்று நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.