< Back
தேசிய செய்திகள்
கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது
தேசிய செய்திகள்

கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது

தினத்தந்தி
|
30 May 2024 12:03 PM IST

இந்தாண்டு தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கோடை காலம் பொதுவாக மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் வரை நீடிக்கும். அந்த வகையில் கோடை காலம் நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்த ஆண்டு கோடையில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே இருந்தது. பல இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவானது.

வெப்பம் உச்சத்தில் இருக்கக்கூடிய கத்திரி வெயில் காலத்தில் கோடை மழை பெய்ததால், தமிழ்நாட்டில் கடந்த 2 வாரங்களுக்கு மேலாக வெப்பம் தணிந்து காணப்படுகிறது. இருப்பினும் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் சில இடங்களில் சூரியன் சுட்டெரித்து வருகிறது.

வழக்கமாக கோடை காலம் முடிந்து, தென் மேற்கு பருவமழை ஜூன் மாதம் முதல் வாரத்தில் அதாவது, ஜூன் 1-ந்தேதி முதல் 5-ந்தேதிக்குள் தொடங்கும். ஆனால் நடப்பாண்டு பருவமழை முன்கூட்டியே தொடங்க இருக்கிறது.

கேரளாவில் தென் மேற்கு பருவமழை அடுத்த 24 மணி நேரத்தில் (அதாவது இன்று) கேரளாவில் தொடங்க இருப்பதாக வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது. இந்நிலையில், இன்று கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கியதாக வானிலை மையம் கூறியுள்ளது.

இதனால் கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும். நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை இயல்பை விட கூடுதலாக இருக்கும் எனவும் கூறியுள்ளது. வயநாடு, காசர்கோடு மற்றும் கண்ணூர் மாவட்டத்தை தவிர பிற மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்