ரெயிலில் டிக்கெட் இன்றி பயணம்; 9 மாதங்களில் ரூ.46¼ கோடி அபராதம் வசூல்
|மைசூரு மண்டலத்தில் 1 லட்சம் வழக்குகள் பதிவாகி ரூ.5.91 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தென்மேற்கு ரெயில்வேக்கு உட்பட்ட பகுதிகளில் மெயில், எக்ஸ்பிரஸ், பாசஞ்சர் ரெயில்களில் டிக்கெட் பரிசோதகர்கள் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். டிக்கெட் எடுக்காமல் 'ஓ.சி.'யில் பயணம் செய்பவர்களை பிடித்து அபராதம் விதித்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி முதல் டிசம்பர் 31-ந்தேதி வரை 9 மாதங்களில் தென்மேற்கு ரெயில்வேக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு ரெயில்களில் டிக்கெட் பரிசோதகர்கள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
இதில், டிக்கெட் இன்றி 'ஓ.சி.'யில் பயணம் மேற்கொண்டதாக 6 லட்சத்து 27 ஆயிரத்து 14 வழக்குகள் பதிவு செய்து ரூ.46 கோடியே 31 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு மண்டலத்தில் 3.68 லட்சம் வழக்குகள் பதிவாகி ரூ.28.26 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. உப்பள்ளி மண்டலத்தில் 96,790 வழக்குகள் பதிவாகி ரூ.6.36 கோடியும், மைசூரு மண்டலத்தில் 1 லட்சம் வழக்குகள் பதிவாகி ரூ.5.91 கோடியும், பறக்கும்படை சோதனையில் 61 ஆயிரம் வழக்குகள் பதிவாகி ரூ.5.77 கோடியும் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.