< Back
தேசிய செய்திகள்
கேரள முன்னாள் முதல்-மந்திரி உம்மன் சாண்டி உடலுக்கு சோனியா, ராகுல்காந்தி அஞ்சலி
தேசிய செய்திகள்

கேரள முன்னாள் முதல்-மந்திரி உம்மன் சாண்டி உடலுக்கு சோனியா, ராகுல்காந்தி அஞ்சலி

தினத்தந்தி
|
18 July 2023 4:28 PM GMT

பெங்களூருவில் மரணம் அடைந்த கேரள முன்னாள் முதல்-மந்திரி உம்மன் சாண்டி உடலுக்கு சோனியா காந்தி, ராகுல்காந்தி, சித்தராமையா, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

பெங்களூரு:-

உம்மன் சாண்டி மரணம்

கேரள மாநில முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமாக இருந்தவர் உம்மன் சாண்டி. இவர், புற்றுநோய் காரணமாக அவதிப்பட்டார். இதற்காக வெளிநாடு சென்று சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பெங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் நேற்று அதிகாலை 4.25 மணியளவில் உம்மன் சாண்டி மரணம் அடைந்தார்.

இதையடுத்து, ஆஸ்பத்திரியில் இருந்து அவரது உடல் பெங்களூரு இந்திராநகரில் உள்ள உம்மன் சாண்டியின் நண்பரும், முன்னாள் மந்திரியுமான டி.ஜான் வீட்டுக்கு நேற்று காலை 8.30 மணியளவில் கொண்டு செல்லப்பட்டது. பெங்களூருவில் நேற்று காலை 11 மணியளவில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கேரள முன்னாள் முதல்-மந்திரி உம்மன் சாண்டி மரணம் அடைந்ததால், அந்த கூட்டம் ஒரு மணி நேரம் தள்ளி வைக்கப்பட்டது.

சோனியா ஆறுதல்

அதே நேரத்தில் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க வந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல்காந்தி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பெங்களூருவிலேயே தங்கி இருந்ததால், இந்திராநகருக்கு சென்று உம்மன்சாண்டி உடலுக்கு அவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் உம்மன் சாண்டியின் மனைவி மரியம்மா உம்மன் மற்றும் குடும்பத்தினருக்கு சோனியா காந்தி, ராகுல்காந்தி கட்டித்தழுவி ஆறுதல் கூறினார்கள்.

இதுபோல், எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க பெங்களூருவுக்கு வந்திருந்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சதாசிவநகரில் உள்ள தனது சகோதரி வீட்டில் தங்கி இருந்தார். உம்மன் சாண்டி மறைவை கேட்ட அவரும், நேற்று காலை 10 மணியளவில் இந்திராநகருக்கு சென்று உம்மன் சாண்டி உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

சித்தராமையா அஞ்சலி

மேலும் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் உம்மன் சாண்டி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். அவர்களது குடும்பத்திற்கும் ஆறுதல் கூறினார்கள்.

அதைத்தொடர்ந்து, காலை 11.30 மணியளவில் இந்திராநகரில் இருந்து எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு உம்மன் சாண்டியின் உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து விமானம் மூலம் உம்மன் சாண்டியின் உடல் கேரள மாநிலத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதுகுறித்து முதல்-மந்திரி சித்தராமையா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் இந்தியா மிகப்பெரிய தலைவரை இழந்து விட்டது. கேரள மாநில முன்னாள் முதல்-மந்திரி உம்மன் சாண்டியின் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. ஒரு நல்ல தலைவரை இழந்து விட்டோம். காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக அயராது உழைத்தவர். நல்ல முதல்-மந்திரியாகவும் செயல்பட்டு இருந்தார். உம்மன் சாண்டி சிறந்த நிர்வாக திறமை கொண்டவர் என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்