மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு செல்கிறார் சோனியா காந்தி
|மருத்துவ பரிசோதனைக்காக காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி வெளிநாடு செல்ல உள்ளார்.
புதுடெல்லி,
பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு காங்கிரசை வலுப்படுத்தவும், மீண்டும் ஆட்சியை கைப்பற்றவும் நாடு முழுவதும் மிகப்பெரிய யாத்திரையை காங்கிரஸ் நடத்துகிறது. கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி பாத யாத்திரை செல்கிறார். வருகிற 7-ந்தேதி இந்த யாத்திரையை அவர் தொடங்குகிறார்.
அதற்கு முன்னதாக செப்டம்பர் மாதம் 4-ந் தேதி டெல்லியில் நடைபெறும் காங்கிரஸ் பேரணியில் பங்கேற்று ராகுல்காந்தி உரையாற்றுகிறார். இந்த நிலையில் மருத்துவ பரிசோதனைக்காக காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி வெளிநாடு செல்ல உள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரும் சோனியா காந்தியுடன் வெளிநாடு செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அவர்கள் எந்த தேதியில் பயணம் மேற்கொள்கின்றனர். எந்த நாடுகளுக்கு அவர்கள் செல்கின்றனர் என்ற விவரங்கள் அந்த அறிக்கையில் இடம் பெறவில்லை.
தமது பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்பும் முன்பு, உடல் நிலை சரியில்லாத தனது தாயாரை சோனியா காந்தி சந்திப்பார் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.