பெங்களூருவில் சோனியா, ராகுலுக்கு உற்சாக வரவேற்பு
|பெங்களூருவில் நடக்கும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள சோனியா காந்தி, ராகுல் காந்தி பெங்களூரு வந்தடைந்தனர்.
பெங்களூரு,
எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க பெங்களூரு வந்தடைந்த காங்கிரஸ் தலைவர் கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை விமான நிலையத்தில் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் ஆகியோர் வரவேற்றனர்.
பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் முதலாவது கட்டம் நடந்த நிலையில் 2-வது கூட்டம் பெங்களூருவில் நடக்கிறது. திமுக, காங்கிரஸ், ஆம் ஆத்மி , திரிணாமூல் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் பங்கேற்க உள்ளனர்.
திமுக சார்பில் பங்கேற்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை விமான நிலையத்தில் வந்து கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் வரவேற்றார்.
மேற்கு வங்க முதல்-மந்திரியும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி இரண்டு நாள் கூட்டு எதிர்க்கட்சி கூட்டத்தில் பங்கேற்பதற்காக பெங்களூரு வந்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்க வந்த சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில்,
"மக்கள் தொகையில் 2/3 பேர் பாஜகவை தோற்கடிக்கப் போகிறார்கள். பாஜக துடைத்து எறியப்படும் என நாட்டின் மூலை முடுக்குகளிலிருந்து எனக்குத் தகவல் வருகிறது.நாட்டு மக்கள் பாஜகவுக்கு மிகப்பெரிய தோல்வியைத் தருவார்கள் என்று நம்புகிறேன் என்றார்.
தமிழகத்திலிருந்து விசிக, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சித்தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.