< Back
தேசிய செய்திகள்
பெங்களூருவில் நடக்கும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் சோனியா காந்தி பங்கேற்கிறார்
தேசிய செய்திகள்

பெங்களூருவில் நடக்கும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் சோனியா காந்தி பங்கேற்கிறார்

தினத்தந்தி
|
11 July 2023 3:00 AM IST

வருகிற 17 மற்றும் 18-ந் தேதியில் பெங்களூருவில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் சோனியா காந்தி பங்கேற்க இருப்பதாக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.

பெங்களூரு:-

அனைத்துக்கட்சி கூட்டம்

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜனதா ஆட்சிக்கு எதிரான எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு வருகின்றன. அடுத்த ஆண்டு(2024) நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள இப்போதே முனைப்பு காட்டி வருகின்றன. அண்மையில் பீகார் மாநிலம் பாட்னாவில் அங்கிருக்கும் முதல்-மந்திரி நிதிஷ்குமார் முயற்சியின் காரணமாக எதிர்க்கட்சிகளை சார்ந்த அனைத்துக்கட்சி கூட்டம் அங்கு நடைபெற்றது.

மத்தியில் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை விட, யார் ஆட்சியில் இருக்கக்கூடாது என்ற ஒற்றை கருத்து அடிப்படையில் இந்த கூட்டம் நடந்தது. இதையடுத்து கர்நாடக தலைநகர் பெங்களூருவில் வருகிற 17 மற்றும் 18-ந் தேதிகளில் மீண்டும் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி வருகிற 17 மற்றும் 18-ந் தேதிகளில் பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை நடத்த கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் ஆயத்தமாகி வருகிறார்கள். இதுதொடர்பாக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

சோனியா காந்தி

மத்தியில் யார் ஆட்சியில் இருக்க கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் வருகிற 17 மற்றும் 18-ந் தேதிகளில் பெங்களூருவில் எதிர்க்கட்சிகளை சார்ந்த அனைத்துக்கட்சி கூட்டம் நடக்கிறது. இதில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்பட முக்கிய தலைவர்கள் பங்கேற்கிறார்கள். அதுபோல் வருகிற 12-ந் தேதி(நாளை) பெங்களூரு சுதந்திர பூங்காவில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து மவுன போராட்டத்தை நடத்த உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்