பாஜக நிர்வாகி 'டிக் டாக் புகழ்' சோனாலி போகத் மாரடைப்பால் மரணம்
|சோனாலியின் அகால மரணம் பாஜகவினர் மத்தியிலும் அவரது டிக்டாக் ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவா,
டிக் டாக் பிரபலமும் பாஜக நிர்வாகியுமான சோனாலி, போகத்(வயது 43) கோவாவில் மாரடைப்பால் மரணமடைந்தார். 2006- ஆம் ஆண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று ஓரளவு பிரபலம் அடைந்த சோனாலி போகத், பின்னர் டிக் டாக் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலம் அடைந்தார். 2020 ஆம் ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள சோனாலி போகத், அரியானா சட்டமன்ற தேர்தலில் அதம்பூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு இருந்தார். காங்கிரஸ் பிரமுகர் குல்தீப் பிஷ்ணோயை எதிர்த்துப் போட்டியிட்டார். ஆனால் அதில் அவர் வெற்றி பெறவில்லை.
தேர்தலில் வென்று எம்எல்ஏவான குல்தீப் பிஷ்ணோய் கடந்த மாதம், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியதோடு எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்தார். பாஜகவிலும் அவர் இணைந்தார். இந்த நிலையில், ஆதம்பூர் இடைத் தேர்தலில் பாஜக சார்பில் மீண்டும் சோனாலியை நிறுத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் கோவா சென்றிருந்த சோனாலி மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். உயிரிழப்பதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் சோனாலி போகத் தனது படத்தையும் பகிர்ந்து இருந்தார்.சோனாலியின் அகால மரணம் பாஜகவினர் மத்தியிலும் அவரது டிக்டாக் ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.