தாயை கத்தியால் குத்திக்கொன்ற மகன்... அதிர்ச்சி சம்பவம்
|திருச்சூர் அருகே கத்தியால் குத்தி பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது மகனை போலீசார் கைது செய்தனர்.
திருச்சூர்,
கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் மாளா அருகே வெளியேத்து பகுதியை சேர்ந்தவர் ஷைலஜா (வயது 52). இவரது மகன் ஆதில் (27). மனநோயால் பாதிக்கப்பட்ட இவர், தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையே ஆதில் தனது தாயுடன் அடிக்கடி தகராறு செய்து வந்தார். இந்தநிலையில் நேற்று காலை ஷைலஜா தனது மகனை சாப்பிட வருமாறு அழைத்து உள்ளார்.
அப்போது திடீரென ஆத்திரம் அடைந்த ஆதில், அருகில் இருந்த கத்தியை எடுத்து தாயை குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து ஷைலஜாவை மீட்டு மாளாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி ஷைலஜா இறந்தார்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், மனநலம் பாதித்த மகன் தாயை கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது. பின்னர் ஆதிலை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரை திருச்சூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.