ரூ.36 லட்சம் இழப்பீட்டு தொகையை திருடி மொபைல் கேம் விளையாடிய போலீஸ்காரரின் மகன்
|தெலுங்கானாவில் தாயாரின் வங்கி கணக்கில் இருந்து மகன் ரூ.36 லட்சம் திருடி மொபைல் கேம் விளையாடிய அதிர்ச்சி சம்பவம் தெரிய வந்துள்ளது.
ஐதராபாத்,
தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் ஆம்பர்பேட் பகுதியில் வசித்து வரும் 11ம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுவன் தனது தாத்தாவின் மொபைல் போனில் இருந்து கேம் ஒன்றை பதிவிறக்கம் செய்துள்ளான்.
இதன்பின்பு விளையாட்டுக்கான செயலி ஒன்றை அதற்கான தளத்தில் இருந்து வாங்குவதற்காக முதலில் ரூ.1,500 மற்றும் ரூ.10 ஆயிரம் தொகையை தனது தாயாரின் வங்கி கணக்கில் இருந்து திருடியுள்ளான்.
இதன்பின்னர், ரூ.1.45 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை இதுபோன்று தொடர்ச்சியாக பணம் எடுத்து உள்ளான். விளையாட்டுக்கு அடிமையாகி உள்ளான். அதில், பணம் கரைந்து போயுள்ளது.
இது சிறுவனின் தாயாருக்கு தெரியவில்லை. ஆனால், எஸ்.பி.ஐ. வங்கிக்கு பணம் எடுக்க சென்றபோது அவருக்கு அதிர்ச்சியான விசயம் தெரிய வந்தது. அவரது வங்கி கணக்கில் ரூ.27 லட்சம் இருந்தது.
ஆனால், அந்த தொகை முழுவதும் அவருக்கு தெரியாமலேயே எடுக்கப்பட்டு இருந்தது அறிந்து அதிர்ச்சியானார். இதன்பின் எச்.டி.எப்.சி. வங்கிக்கு சென்று கணக்கை பார்த்துள்ளார். அதில், ரூ.9 லட்சம் எடுக்கப்பட்டு இருந்தது.
இதனால், சைபர் பிரிவு போலீசாரை தொடர்பு கொண்டு அந்த பெண் புகார் அளித்துள்ளார். இந்த விசாரணையில் மொபைல் போன் கேமில் அடிமையான அவரது மகன் ரூ.36 லட்சம் எடுத்து செலவு செய்துள்ளது தெரிய வந்தது.
அந்த பெண்ணின் கணவர் காவல் துறையில் பணிபுரிந்து உயிரிழந்து உள்ளார். அதற்கு கிடைத்த இழப்பீட்டு தொகையை இரண்டு வங்கிகளிலும் போட்டு வைத்துள்ளார். ஆனால், மகனின் பொறுப்பற்ற செயலால் அந்த பணம் வீணாகி உள்ளது.