குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட மகன் கொலை; போலீசில் முதியவர் சரண்
|பெங்களூரு அருகே குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட மகனை கொலை செய்த முதியவர் போலீசில் சரண் அடைந்தார்.
ஒசக்கோட்டை:
பெங்களூரு புறநகர் மாவட்டம் ஒசக்கோட்டை தாலுகா தேவலாபுரா கிராமத்தைச் சேர்ந்தவர் முனிசாமி(வயது 65). இவரது மகன் தியாகராஜ்(38). இவர் வேலைக்கு எதுவும் செல்லாமல் தினமும் மதுஅருந்திவிட்டு வீட்டிற்கு வந்து பெற்றோரிடம் தகராறு செய்து வந்துள்ளார். மேலும் மதுகுடிக்க பணம் கேட்டு பெற்றோருக்கு தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் குடிபோதையில் வீட்டிற்கு வந்த தியாகராஜ், தனது பெற்றோரிடம் மதுகுடிக்க பணம் தரும்படி கேட்டு தகராறில் ஈடுபட்டு உள்ளார்.
மேலும் தனது பெற்றோரை தாக்கியும் உள்ளார். அப்போது ஆத்திரம் அடைந்த முனிசாமி வீட்டில் கிடந்த இரும்பு உருளையை எடுத்து தியாகராஜை தாக்கினார். இதில் ரத்தவெள்ளத்தில் சரிந்து விழுந்த தியாகராஜ் பரிதாபமாக இறந்தார். இதன்பின்னர் அனுகொண்டனஹள்ளி போலீஸ் நிலையத்திற்கு சென்ற முனிசாமி தனது மகனை கொலை செய்து விட்டதாக கூறி சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் தியாகராஜின் உடலை பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து அனுகொண்டனஹள்ளி போலீசார் முனிசாமி மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.