சோமாலியா கடற்கொள்ளையர்கள் மும்பை போலீசாரிடம் ஒப்படைப்பு
|இந்திய கடற்படையின் போர்க்கப்பலான ஐ.என்.எஸ். கொல்கத்தாவில் கொண்டு வரப்பட்ட 35 கடற்கொள்ளையர்கள் மும்பை போலீசாரிடம் இன்று ஒப்படைக்கப்பட்டனர்.
புதுடெல்லி,
சோமாலியாவின் கடலோர பகுதியில் அடிக்கடி கப்பல்களை தடுத்து நிறுத்தி கொள்ளையடிக்கும் சம்பவங்களும், கப்பலை கடத்தும் முயற்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இதில், சோமாலியா நாட்டு கடற்கொள்ளையர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில், சோமாலியாவின் கிழக்கு கடலோர பகுதியில், எக்ஸ்-எம்.வி. ரூயென் என்ற வர்த்தக கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது.
இதனை சோமாலியா கடற்கொள்ளையர்கள் சிலர் சேர்ந்து தடுத்து நிறுத்தி, கப்பலுக்குள் புகுந்து அதனை கடத்த முயற்சித்தனர். இந்நிலையில், இந்த விவரம் அறிந்த இந்திய கடற்படையினர் இந்த முயற்சியை முறியடித்து உள்ளனர்.
அந்த கப்பலில், பல்கேரியா, அங்கோலா மற்றும் மியான்மர் நாடுகளை சேர்ந்தவர்கள் பயணம் செய்தனர். கப்பலுக்குள் 30 கடற்கொள்ளையர்கள் வரை புகுந்திருக்க கூடும் என நம்பப்பட்டது. அவர்கள் இந்த கப்பலை தாய் கப்பலாக பயன்படுத்தி பிற பகுதிகளில் கொள்ளை சம்பவங்களை நடத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில், இந்திய கடற்படையினரை நோக்கி அவர்கள் துப்பாக்கிகளால் சுட்டுள்ளனர். இதுபற்றி இந்திய கடற்படையினர் வெளியிட்டுள்ள செய்தியில், எங்களுடைய போர் கப்பலை நோக்கி அவர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால், சர்வதேச சட்டம், சுய பாதுகாப்பு மற்றும் கடற்கொள்ளையர்களை ஒழித்தல் ஆகியவற்றிற்காக குறைந்த அளவு படைகளை பயன்படுத்தி அவர்களின் அச்சுறுத்தலை முறியடிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டன என தெரிவித்தனர்.
அவர்களிடம் சமரச முயற்சிக்காக பேசி, சோமாலியா கடற்கொள்ளையர்களை சரணடையும்படி இந்திய கடற்படை அதிகாரிகள் கூறினர். இந்த நடவடிக்கையில், ஐ.என்.எஸ். கொல்கத்தா கப்பலுடன், ஐ.என்.எஸ். சுபத்ரா கப்பலும் இணைந்து கொண்டது. இதன்பின்னர், வான்வழியே கடல்படை வீரர்கள் பாராசூட்டில் பறந்து சென்று, கப்பலில் அதிரடியாக இறங்கி மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இதனால், கடற்கொள்ளையர்கள் அனைவரும் சரணடைந்தனர். அவர்கள் சரணடைந்த பின்னர், கப்பலில் ஆயுதங்கள், வெடிபொருட்கள் உள்ளிட்டவை உள்ளனவா? என சோதனை நடத்தப்பட்டது. கப்பலில் பழுது எதுவும் இருக்கின்றனவா? என்றும் சரிபார்க்கப்பட்டது. இதன்பின்னர், அந்த கப்பல் தொடர்ந்து இயக்கப்பட்டது.
35 கடற்கொள்ளையர்கள் மற்றும் கப்பல் ஊழியர்கள் 17 பேர் ஆகியோரை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன், அவர்களை இந்திய கடற்படை கப்பல்களுக்கு, வீரர்கள் கொண்டு சென்றனர்.
இதன் தொடர்ச்சியாக, 35 கடற்கொள்ளையர்கள் இந்திய கடற்படையின் போர்க்கப்பலான ஐ.என்.எஸ். கொல்கத்தாவில் இன்று கொண்டு வரப்பட்டனர்.
அவர்கள் மும்பைக்கு இன்று காலை கப்பலில் வந்து சேர்ந்தனர். இந்திய சட்டங்களின்படி, குறிப்பிடும்படியாக கடற்கொள்ளை தடுப்பு சட்டம் 2022-ன்படி, தொடர்ந்து கூடுதல் நடவடிக்கை எடுப்பதற்காக மும்பை போலீசாரிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்டனர் என்று இந்திய கடற்படை தெரிவித்து உள்ளது.
கடந்த பிப்ரவரியில் கடற்கொள்ளையை தடுப்பதற்காக அரபி கடலில், இந்திய கடற்படையின் சிறப்பு படைகள் சி-130 விமானத்தில் இருந்து வான்வழியே கீழிறங்கி நடவடிக்கை எடுத்தது. கடற்கொள்ளையையும் தடுத்தது.
கடந்த ஜனவரியில் ஈரானிய கொடியுடன் கூடிய கப்பலில் நடந்த கடற்கொள்ளை முயற்சியை இந்திய கடற்படையின் போர் கப்பலான ஐ.என்.எஸ். சுமித்ரா முறியடித்தது. 19 பாகிஸ்தானியர்களையும் மீட்டது.