சமூகவலைதளம் மூலம் பழக்கம்: 16 வயது மாணவியை சீரழித்த 4 பேர் கைது
|4 வாலிபர்கள் தனித்தனியாக மாணவியை பல இடங்களுக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்து உள்ளனர்.
புனே,
மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள ஜூனியர் கல்லூரியில் சமீபத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான கருத்தரங்கம் நடந்தது. அப்போது, மாணவி ஒருவர் மிகவும் சோகமாக காணப்பட்டார். எனவே மனநல ஆலோசகர்கள் அந்த மாணவியிடம் பேசினர். அப்போது மாணவியின் 16 வயது தோழி 4 வாலிபர்களால் கடந்த 6 மாதங்களாக கற்பழிக்கப்பட்ட அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அந்த 16 வயது சிறுமியிடம் சமூக வலைதளம் மூலம் 4 வாலிபர்கள் பேசி வந்து உள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை வாலிபர்கள் தனித்தனியாக சிறுமியை பல இடங்களுக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்து உள்ளனர். 4 வாலிபர்களும் ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் இல்லாதவர்கள் ஆவர். இதையடுத்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சமூகவலைதளம் மூலம் பழகி 16 வயது சிறுமியை கற்பழித்த 20, 22 வயதான 2 வாலிபர்களை கைது செய்தனர். மேலும் 2 மைனர் வாலிபர்களையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.