கோலாரை ஏமாற்றிய பருவமழையால் சிறுதானிய சாகுபடி 11,728 எக்டேராக குறைந்தது.
|கோலார் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் பருவமழை மொழிவு குறைந்ததால் சிறுதானிய சாகுபடி 11,728 எக்டேராக குறைந்தது. இதனால் தக்காளியை தொடர்ந்து சிறுதானிய பயிர்களின் விலையும் உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
கோலார்:-
விதைப்பு பணி பாதிப்பு
கோலார் வறட்சி நிறைந்த மாவட்டம் என்று எப்போதும் கூறுவார்கள். இருப்பினும் பருவமழை காலங்களில் இங்கு, வறட்சியை பார்க்க முடியாது. குறிப்பாக ஜூன், ஜூலை மாதங்களில் பருவமழை தீவிரமாக பெய்யும். இதனால் விளைபயிர்கள் சிறுதானிய பயிர்கள் சாகுபடிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால் இந்த ஆண்டு போதிய மழை இல்லை என்று கூறப்படுகிறது.
இதனால் விளைபயிர்கள் மற்றும் சிறுதானிய சாகுபடி பாதிக்கப்பட்டது. முதலாவதாக கோலாரில் தக்காளி சாகுபடி அதிகளவு பாதிக்கப்பட்டது. இதற்கு மழை பொழிவு குறைவும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் தக்காளி விலை உச்சத்தை தொட்டு வருகிறது. இன்றுவரை அந்த தக்காளியின் விலை குறையவில்லை.
சிறுதானிய பயிர்கள்
இதேநிலை பிற பயிர்களுக்கும் ஏற்படும் அவலம் நிலவி வருகிறது. அதாவது மக்காச் சோளம், மோவினச் சோளம், எள்ளு, நிலக்கடலை, கொகரி, பத்தே ஆகிய சிறுதானியப் பயிர்களின் சாகுபடி குறைந்துவிட்டது. இந்த சிறுதானிய பயிர்கள் சாகுபடி குறைவிற்கு முக்கிய காரணம், போதிய மழை இல்லை என்பதே.
இந்த சிறுதானியப் பயிர்கள் அனைத்தும் கோலார் மாவட்டத்தில் விளைவிக்கப்படும் தினைப்பயிர்கள் ஆகும். இங்கு உற்பத்தியாகும் தினைப்பயிர்கள் வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதுவரை இந்த தினைப்பயிர்கள் சாகுபடியில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால் இந்த ஆண்டு வரலாறு காணாத பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
சிறுதானிய விதைப்பு குறைந்தது
குறிப்பாக கோலார் மாவட்டத்தில் உள்ள மாலூர், கோலார் தாலுகா, தங்கவயல், பங்காருபேட்டை, முல்பாகல், சீனிவாசப்பூர் ஆகிய 6 தாலுகாக்களிலும் சேர்ந்து, ஒரு லட்சம் எக்டேருக்கு தினைப்பயிர்கள் விதைக்கப்படும். ஆனால் நடப்பு ஆண்டில் ஜூன், ஜூலை மாதங்களில் மழை பொழிவு குறைந்து காணப்பட்டதால் 11,728 எக்டேர் மட்டுமே தினைப்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டிருக்கிறது. அதாவது கடந்த ஆண்டை ஒப்பிடும்போது ஜூன், ஜூலை மாதங்களில் 11.43 சதவீதம் மட்டுமே விதைப்பு பணிகள் நடந்துள்ளது. இதில் கோலாரில் மட்டும் 35,833 எக்டேர் சாகுபடி செய்யப்படும். ஆனால் இந்தமுறை சாகுபடி குறைந்துவிட்டது.
7.8 சதவீதம் மழை பதிவு
இதுகுறித்து வேளாண்த்துறை இணை இயக்குனர் ரூபாதேவி கூறியதாவது:-
கடந்த 2022-ம் ஆண்டு பங்காருபேட்டையில் 6.9 செ.மீ மழை பெய்தது. இந்த ஆண்டு 4.7 செ.மீ மட்டுமே மழை பெய்தது. இதேபோல கோலாரில் இந்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் 6.2 செ.மீ, மாலூரில் 5.1 செ.மீ, முல்பாகிலுவில் 6.0 செ.மீ, சீனிவாசப்பூரில் 7.2 செ.மீ, தங்கவயலில் 3.9 செ.மீ என மொத்தம் 6 தாலுகாவிலும் 5.8 செ.மீ அளவு மட்டுமே மழை பதிவாகியிருக்கிறது.
அதாவது கடந்த 2022-ம் ஆண்டு 6 தாலுகாவிலும் சேர்த்து 7.9 சதவீதம் மழை பதிவாகியிருந்தது. இந்த ஆண்டு அவை 5.8 சதவீதமாக குறைந்தது. குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது.
11,728 எக்டேராக குறைந்தது
இதனால் 68,400 ஹெக்டேர் என்று நிர்ணயித்திருந்த சாகுபடி பணிகள், 6,723 எக்டேராக குறைந்துவிட்டது. அதன்படி அதிகப்படியாக இந்த ஆண்டு முல்பாகிலுவில் 4,291 எக்டேருக்கு சிறுதானியங்கள் சாகுபடி செய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து கோலார் தாலுகாவில் 4,058 எக்டோ், தங்கவயலில் 1,935 எக்டேர், பங்காருபேட்டையில் 727 எக்டேர், மாலூரில் 330 எக்டேர், சீனிவாசப்பூரில் 387 எக்டேருக்கு சாகுபடி செய்யப்பட்டிருக்கிறது. அதாவது மொத்தம் 6 தாலுகாவில் சேர்த்து 11,728 எக்டேர் மட்டுமே பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, இது 5 மடங்கு குறைந்திருக்கிறது. இதுகுறித்து வேளாண்துறை தரப்பில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதேநிலை நீடித்தால் வரும் நாட்களில் தக்காளியை போன்று சிறுதானியங்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.