இந்து கடவுள்கள் குறித்து அவதூறு கருத்து; காங்கிரஸ் பெண் நிர்வாகி வீட்டின் மீது தாக்குதல்
|புத்தூர் அருகே இந்து கடவுள்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த காங்கிரஸ் பெண் நிர்வாகி வீட்டின் மீது தாக்குதல் நடத்திய மர்ம நபர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மங்களூரு;
இந்து கடவுள்கள் குறித்து...
தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூர் டவுன் பகுதியை சேர்ந்தவர் ஷைலஜா அமர்நாத். வக்கீலான இவர், காங்கிரஸ் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகியாகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 16-ந்தேதி புத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ைஷலஜா கலந்து கொண்டு பேசியுள்ளார்.
அப்போது அவர், இந்து கடவுள்கள் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் அப்பகுதியை சேர்ந்த இந்து அமைப்பினர்களுக்கு தெரியவந்தது. இதைதொடர்ந்து இந்து அமைப்பு பிரமுகர்கள், ஷைலஜாவுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
வீட்டின் மீது தாக்குதல்
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மாலை ஷைலஜா, அவரது குடும்பத்தினர் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது ஷைலஜா வீட்டு முன்பு 2 மோட்டார் சைக்கிளில் 4 பேர் கொண்ட கும்பல் வந்து நின்றது. பின்னர் அந்த கும்பல், ஷைலஜா வீட்டின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்த தொடங்கினர்.
இந்த தாக்குதலில் வீட்டு ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியது. வீட்டு சுவர்களில் கருப்பு மை பூசினர். இதனால் ஷைலஜா, அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து மர்மகும்பல், ஷைலஜாவுக்கு எதிராக கோஷமிட்டுகொண்டு மோட்டார் சைக்கிள்களில் சென்றுவிட்டனர். ஆனால் ஷைலஜா வீட்டின் மீது தாக்குதல் நடத்திய மர்மகும்பல் யார், எதற்காக தாக்குதலில் ஈடுபட்டனர் என்பது தெரியவில்லை. இந்து கடவுள்கள் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்ததால் இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் வீட்டின் மீது தாக்குதல் நடத்தி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
பரபரப்பு
இதுகுறித்து ஷைலஜா, புத்தூர் போலீசில் புகார் அளித்தார். அதேநேரத்தில் இந்து கடவுள்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த ஷைலஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்து அமைப்பினரும் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகார்களின் பேரில் புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.