பாக்.இந்துக்கள் 6 பேருக்கு இந்திய குடியுரிமை: முழு சுதந்திரத்தை உணர்வதாக பேட்டி
|இதுவரை மொத்தம் 319 பேருக்கு இந்திய குடியுரிமை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவை அமல்படுத்துவதற்கான விதிமுறைகள் கடந்த 12-ந்தேதி வெளியிடப்பட்டன. இத்துடன் இச்சட்டம் அமலுக்கு வந்துவிட்டதாக மத்திய அரசு அறிவித்தது. இதன்படி பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மத அடக்குமுறைக்கு உள்ளாகி, அங்கிருந்து 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதிக்கு முன்பு இந்தியாவில் குடியேறிய இந்து, கிறிஸ்தவர், சீக்கியர், சமணர், பார்சிகள், பவுத்தர்கள் ஆகிய சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்க இந்த சட்ட மசோதா வழிவகை செய்கிறது.
இந்த நிலையில், பாகிஸ்தானில் இருந்து புலம்பெயர்ந்து இந்தியாவிற்கு வந்த 6 இந்துக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில், 2010-ல் புலம்பெயர்ந்த பிரேம்லதா, சஞ்சய் ராம், பெஜால், ஜஜ்ராஜ், கேகு மாய் மற்றும் கோமந்த் ராம் ஆகியோருக்கு குடியுரிமை சான்றிதழை கூடுதல் மாவட்ட கலெக்டர் ஷபாலி குஷ்வாஹா வழங்கினார்.
பாகிஸ்தான் கராச்சியில் இருந்து இடம்பெயர்ந்த பிரேம்லதா (41), "இந்தியாவுக்கு திரும்பிய பின்னர்தான் நாங்கள் முழு சுதந்திரத்தை உணர்கிறோம். மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றி'' என தெரிவித்துள்ளார்.
சஞ்சய் ராம், நான் 10 ஆண்டுகளாக குடியுரிமை பெற முயற்சித்து வருகிறேன். இப்போதுதான் பல ஆண்டுகளுக்கு பிறகு அது சாத்தியமாகியுள்ளது. இப்போது நாங்கள் இந்தியர்கள் என்று பெருமையுடன் சொல்ல முடியும் என தெரிவித்தார்.
இது குறித்து கூடுதல் மாவட்ட கலெக்டர் ஷபாலி குஷ்வாஹா கூறுகையில்,
இந்திய குடியுரிமை பெற்ற இடம்பெயர்ந்தவர்களுக்கு வாழ்த்துகள். மாவட்ட நிர்வாகம் குடியுரிமை விண்ணப்பங்களை விதிகளின் அடிப்படையில் முன்னுரிமை வழங்கி பரிசீலித்து வருகிறது. தகுதியுடைய 319 பேருக்கு இந்திய குடியுரிமை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என்றார்.