ஜார்க்கண்ட்: சாலை தடுப்பு மீது கார் மோதி விபத்து - 6 பேர் பலி
|விபத்தில் படுகாயமடைந்த 3 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ராஞ்சி,
ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூர் நகரில் பிஸ்துபூர் காவல் நிலையம் அமைந்துள்ளது. இந்த காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட சர்க்யூட் ஹவுஸ் அருகே உள்ள சாலையில் இன்று அதிகாலை கார் சென்றுகொண்டிருந்தது. அந்த காரில் 8 பேர் பயணித்தனர்.
அதிகாலை 5 மணியளவில் அதிவேகமாக சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் தடுப்புச்சுவர் மீது மோதியது. இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த 3 பேரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். படுகாயமடைந்தவர்களில் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்தது. எஞ்சிய 2 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.