நாளை பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழல்; ஓட்டலில் ஷிண்டே, பட்னாவிஸ் ஆலோசனை
|மராட்டியத்தில் புதிய அரசு சட்டசபையில் நாளை பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழலில், ஏக்நாத் ஷிண்டே, பட்னாவிஸ் உள்ளிட்டோர் ஓட்டலில் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகின்றனர்.
புனே,
மராட்டியத்தில் மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சிவசேனாவின் மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுடன், பா.ஜ.க. கைகோர்த்தது.
இந்த சூழலில், கடந்த வியாழ கிழமை (ஜூன் 30ந்தேதி) மாலை 5 மணிக்குள் சிவசேனா அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவிட்டார். இந்நிலையில், முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்கிறேன் என கூறி கடந்த 29ந்தேதி இரவு உத்தவ் தாக்கரே பதவி விலகினார்.
அவர் பதவி விலகிய சூழலில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அவசியமில்லை என கவர்னர் கூறினார். இதன்பின்னர், அடுத்தடுத்து அரசியல் திருப்பங்கள் ஏற்பட்டன. அதிக உறுப்பினர்களை கொண்ட பா.ஜ.க. ஆட்சியமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென பட்னாவிஸ் துணை முதல்-மந்திரி என்றும் ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரியாக பதவியேற்பார் என்றும் தகவல் வெளியானது.
இதன்படி, ஷிண்டே முதல்-மந்திரியானார். பா.ஜ.க.வின் எம்.எல்.ஏ. ராகுல் நர்வேகர் இன்று சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். மராட்டியத்தில் புதிய அரசு வருகிற திங்கட்கிழமையன்று (நாளை) சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, தனது சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் அணியுடன், துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பிற கட்சி தலைவர்களுடன் ஓட்டலில் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தி வருகிறார்.