மணிப்பூரில் கமாண்டோ படையினர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்: மோரே பகுதியில் பதற்றமான சூழல்
|மோரே நகரில் உள்ள கமாண்டே படையினரின் முகாம்கள் மீது பயங்கரவாதிகள் ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.
இம்பால்,
மணிப்பூரில் பழங்குடியின அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் மெய்தி மற்றும் குகி இன மக்களுக்கு இடையே நீடித்து வந்த மோதல் கடந்த மே மாதம் 3-ந் தேதி பெரும் கலவரமாக வெடித்தது. இந்த கலவரத்தில் இதுவரை 180-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்து அகதிகளை போல முகாம்களில் அவதியுற்று வருகின்றனர்.
இந்த நிலையில் மணிப்பூரில் மியான்மர் நாட்டின் எல்லையோரம் அமைந்துள்ள மோரே நகரில் நேற்று முன்தினம் மாலை மாநில கமாண்டோ படையினர் வாகனங்களில் அணிவகுத்து சென்று கொண்டிருந்தனர். அப்போது மர்ம நபர்கள் சிலர் கமாண்டோ படையினரின் வாகனங்கள் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் கமாண்டோ படை வீரர் ஒருவர் பலத்த காயம் அடைந்தார். அவர் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று முன்தினம் இரவு மோரே நகரில் உள்ள கமாண்டே படையினரின் முகாம்கள் மீது பயங்கரவாதிகள் ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். ராக்கெட் குண்டுகள் முகாம்களுக்குள் விழுந்து வெடித்து சிதறியதில் 3 வீரர்கள் பலத்த காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து சுதாரித்துக்கொண்ட கமாண்டோ படையினர் பயங்கரவாதிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டு பதிலடி கொடுத்தனர்.
இருதரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்ததாகவும், இதில் பயங்கரவாதிகள் 6 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கமாண்டோ படையினரை குறிவைத்து அடுத்தடுத்து நடத்தப்பட்ட தாக்குதல்களால் மணிப்பூரில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவுகிறது.