ஆப்கானிஸ்தானில் சிறுபான்மையினரின் நிலைமை படுமோசம்: நாடு திரும்பிய சீக்கியர்கள் பேட்டி
|ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் எங்களை சிறையில் தள்ளி, முடிகளை வெட்டி கொடுமைப்படுத்தினர் என நாடு திரும்பிய சீக்கியர்கள் பேட்டியில் கூறி உள்ளனர்.
புதுடெல்லி,
ஆப்கானிஸ்தான் நாட்டில் அரசுக்கு எதிராக நீண்டகால போரில் ஈடுபட்டு இருந்த தலீபான்கள் கடந்த ஆண்டு ஆட்சியை கைப்பற்றினர். இதனை தொடர்ந்து, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். பெண்களுக்கு எதிராக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
அந்நாட்டின் ஆட்சி தலீபான்கள் கைக்கு சென்றதும், லட்சக்கணக்கானோர் தப்பி வெளிநாடுகளில் தஞ்சம் புக தொடங்கினர். இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் வசிக்கும் சீக்கியர்கள் பல கொடுமைகளை அனுபவித்து வருகிறோம் என கூறியுள்ளனர்.
இதனை தொடர்ந்து, அவர்களை மீட்கும் பணியில் இந்திய அரசு ஈடுபட்டது. அந்நாட்டில் தலீபான் தலைமையிலான ஆட்சியில் சிறுபான்மையினருக்கு எதிரான அடக்கு முறையால் பாதிக்கப்பட்டோரை சொந்த நாட்டுக்கு திரும்ப கொண்டு வரும் முயற்சியாக சீக்கியர்கள் அழைத்து வரப்பட்டனர்.
இதன்படி, ஆப்கானிஸ்தானில் இருந்து சிறுபான்மையினரான 55 சீக்கியர்களை சுமந்து கொண்டு சிறப்பு விமானம் ஒன்று டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கி உள்ளது.
நாடு திரும்பிய 55 சீக்கியர்களில் ஒருவரான பல்ஜீத் சிங் என்பவர் கூறும்போது, ஆப்கானிஸ்தான் நாட்டில் நிலைமை நன்றாக இல்லை. என்னை 4 மாதங்கள் வரை சிறையில் தள்ளினர். தலீபான்கள் எங்களை மோசடி செய்து விட்டனர். சிறையில் எங்களுடைய முடிகளை அவர்கள் வெட்டி விட்டார்கள். இந்தியாவுக்கு திரும்பியதற்காக நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதேபோன்று ஆப்கானிஸ்தானின் சீக்கிய அகதியான சுக்பீர் சிங் என்ற கால்சா கூறும்போது, எங்களுக்கு அவசர விசாக்களை வழங்கி, நாடு திரும்ப உதவி புரிந்ததற்காக இந்திய அரசாங்கத்திற்கு நாங்கள் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்.
எங்களில் பலரது குடும்பத்தினர் ஆப்கானிஸ்தான் நாட்டிலேயே தனித்து விடப்பட்டு உள்ளனர். அவர்களில் 30 முதல் 35 பேரை அந்த நாட்டிலேயே விட்டு விட்டு நாங்கள் வந்துள்ளோம் என்று வேதனையுடன் கூறியுள்ளார்.