வயதான சகோதரிகள் தூக்குப்போட்டு தற்கொலை
|மங்களூருவில் வயதான சகோதரிகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
மங்களூரு:
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு கத்ரி போலீஸ் எல்லைக்குட்பட்ட கம்பல் சந்திரிகா பகுதியை சேர்ந்தவர் ஜெகநாத் பண்டாரி. இவரது மனைவி லதா பண்டாரி (வயது 70). இந்த நிலையில் அவர்களுடன் லதா பண்டாரியின் சகோதரி சுந்தரி ஷெட்டியும் (80) வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை ஜெகநாத் பண்டாரி வெளியே சென்றார். இதனால் சகோதரிகள் மட்டும் வீட்டில் தனியாக இருந்தனர். மாலை 4 மணிக்கு ஜெகநாத் பண்டாரி வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீடு உள்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. நீண்டநேரமாக கதவை தட்டியும் இருவரும் திறக்கவில்லை.
இதனால் சந்தேகமடைந்த ஜெகநாத் பண்டாரி, ஜன்னல் வழியாக பார்த்தார். அப்போது லதாவும், சுந்தரியும் வீட்டுக்குள் தூக்கில் பிணமாக தொங்கினர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், கதறி அழுதார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் கத்ரி போலீசார் விரைந்து வந்து, கதவை உடைத்து உள்ளே சென்று 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில், வயதான சகோதரிகள் 2 பேரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. ஆனால் அவர்களின் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து கத்ரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.