அமலாக்க துறை வழக்கில் சிசோடியாவின் நீதிமன்ற காவல் மே 8-ந்தேதி வரை நீட்டிப்பு
|பிரதமர் மோடி எவ்வளவு முயன்றாலும் டெல்லியில் கெஜ்ரிவாலின் பணியை தடுத்து நிறுத்த முடியாது என்று சிசோடியா செய்தியாளர்களிடம் கூறினார்.
புதுடெல்லி,
டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் குற்றச்சாட்டு கூறப்பட்ட, டெல்லி முன்னாள் துணை முதல்-மந்திரியான மணீஷ் சிசோடியாவிடம், கடந்த பிப்ரவரி 26-ந்தேதி காலையில் சி.பி.ஐ. அலுவலகத்தில் வைத்து, 8 மணி நேரம் நேரடி விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிவில், சிசோடியா இரவில் சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
அவரை சி.பி.ஐ. காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு கோர்ட்டு அனுமதி அளித்தும், பின்னர் அதனை தொடர்ச்சியாக நீட்டித்தும் உத்தரவிட்டது. இதனால், அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்த நிலையில், சிசோடியாவிடம் டெல்லி மதுபான கொள்கையில் 2021-22-ம் ஆண்டில் நடந்த பணமோசடி பற்றி அமலாக்க துறை அதிகாரிகள் கடந்த மார்ச் 9-ந்தேதி விசாரணை நடத்தினர். அதற்கு இரு நாட்களுக்கு முன்பும் இதேபோன்று விசாரணை நடத்தி, அவரது வாக்குமூலங்களை பதிவு செய்து கொண்டனர். இது தொடர்பாக அமலாக்க துறையும் அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், சிசோடியா மற்றும் மற்றவர்கள் மீது சி.பி.ஐ. புதிய எப்.ஐ.ஆர். ஒன்றை கடந்த மார்ச் 20-ந்தேதி பதிவு செய்தது. 2015-ம் ஆண்டு டெல்லி அரசு பீட்பேக் யூனிட் என்ற பெயரில் அமைப்பு ஒன்றை உருவாக்கி தகவலை சேகரித்தது. இந்த தகவல், டெல்லியில் அமல்படுத்த கூடிய சாத்தியப்பட்ட விசயங்களை உள்ளடக்கி இருக்கும் மற்றும் அவை அரசுக்கு உதவ கூடும் என்பதற்காக அந்த யூனிட் உருவானது.
ஆனால், தகவல் சேகரிப்பதற்கான இந்த அமைப்பால் அரசு கஜானாவுக்கு ரூ.1 கோடி வரை இழப்பு ஏற்பட்டு உள்ளது என சி.பி.ஐ. குற்றச்சாட்டு தெரிவித்தது. இதுபோன்று மத்திய முகமைகளால் பல்வேறு வழக்கு பதிவு செய்யப்பட்டு சிசோடியா விசாரணை வளையத்தில் வைக்கப்பட்டு உள்ளார்.
இந்த சூழலில், இதே வழக்கில் டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பி அவரை சி.பி.ஐ. அமைப்பு விசாரணைக்கு அழைத்தது. இந்த விசாரணை கடந்த 16-ந்தேதி காலை தொடங்கி இரவு வரை தொடர்ந்து நடந்தது. 9 மணிநேர விசாரணைக்கு பின்னர் கெஜ்ரிவால் வெளியேறினார்.
இந்த நிலையில், மணீஷ் சிசோடியாவை அதிகாரிகள் கடந்த 17-ந்தேதி டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு கோர்ட்டில் நேரில் ஆஜர்படுத்தினர். இதில், சி.பி.ஐ. மற்றும் அமலாக்க துறை வழக்கில் சிசோடியாவின் நீதிமன்ற காவலை மே 1-ந்தேதி வரை நீட்டித்து முதலில் கோர்ட்டு உத்தரவிட்டது. எனினும், பின்னர் இதில் மாற்றம் செய்து மற்றொரு தீர்ப்பு வெளியானது.
இதன்படி, சி.பி.ஐ. வழக்கில் சிசோடியாவின் காவல் வருகிற 27-ந்தேதி வரையும், அமலாக்க துறை வழக்கில் சிசோடியாவின் காவல் வருகிற 29-ந்தேதி வரையும் நீட்டித்து கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த நிலையில், அமலாக்க துறையின் விசாரணை காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், அவரை கோர்ட்டில் அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். பலத்த பாதுகாப்புடன் அவர் கோர்ட்டுக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அப்போது மணீஷ் சிசோடியா செய்தியாளர்களிடம் பேசும்போது, பிரதமர் மோடி எவ்வளவு முயன்றாலும், டெல்லியில் கெஜ்ரிவாலின் பணியை தடுத்து நிறுத்த முடியாது என்று கூறினார். பணமோசடி வழக்கு ஒன்றில் சிசோடியாவின் ஜாமீன் மனுவை ரோஸ் அவென்யூ சிறப்பு கோர்ட்டு நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டு இருந்தது.