< Back
தேசிய செய்திகள்
சிங்கப்பூர் மாநாட்டில் டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் பங்கேற்க அனுமதிக்காதது ஏன்? பிரதமர் மோடிக்கு கடிதம்
தேசிய செய்திகள்

சிங்கப்பூர் மாநாட்டில் டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் பங்கேற்க அனுமதிக்காதது ஏன்? பிரதமர் மோடிக்கு கடிதம்

தினத்தந்தி
|
17 July 2022 4:24 PM IST

முக்கியமான நிகழ்ச்சிக்கு ஒரு முதல்-மந்திரி செல்வதை தடுப்பது என்பது நாட்டின் நலனுக்கு எதிரானது என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

புதுடெல்லி,

'டெல்லி மாடல்' எனப்படும் டெல்லியில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை பற்றி சிங்கப்பூர் உலக நகரங்கள் மாநாட்டில் விவரிக்கவும் பங்கேற்கவும், அங்கு செல்ல அனுமதி கோரி பிரதமர் மோடிக்கு டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார்.

இம்மாதம் இறுதியில் நடைபெற உள்ள நிகழ்ச்சிக்காக சிங்கப்பூர் செல்ல அனுமதி கோரி ஏற்கெனவே பிரதமருக்கு ஜூன் 7ஆம் தேதி கடிதம் எழுதியதாகவும் கெஜ்ரிவால் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அவருடைய பயணத்திற்கு அனுமதி கிடைக்குமா என்பது தெரியவில்லை. மேலும், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடருக்கு முன்னதாக நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் இந்த விவகாரத்தை எழுப்பியுள்ளது.

"இவ்வளவு முக்கியமான நிகழ்ச்சிக்கு ஒரு முதல்-மந்திரி செல்வதைத் தடுப்பது என்பது நாட்டின் நலனுக்கு எதிரானது.. சிங்கப்பூரிலிருந்து விடுக்கப்பட்ட இந்த அழைப்பு, நமது நாட்டிற்கு பெருமையும், கவுரவமும் ஆகும்" என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரம் டெல்லி யூனியன் பிரதேசத்தின் புதிய துணைநிலை கவர்னர் ஆக கடந்த மே மாதம் பொறுப்பேற்றுக் கொண்ட வினய் குமார் சக்சேனா அலுவலகத்தில் இன்னும் நிலுவையில் உள்ளது.

2019 ஆம் ஆண்டில், இதேபோன்ற பயணத்திற்கு கெஜ்ரிவாலுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு அனுமதி கிடைக்கவில்லையெனில், காணொலி முறையில் தான் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்க வேண்டியிருக்கும் என்று சொல்லப்படுகிறது.

மேலும் செய்திகள்