ஜன்தன் கணக்குகள் 50 கோடியை கடந்திருப்பது முக்கியமான சாதனை - பிரதமர் மோடி
|ஜன்தன் கணக்குகள் 50 கோடியை கடந்திருப்பது முக்கியமான சாதனை என்று பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்து உள்ளார்.
நாட்டு மக்கள் அனைவரும் வங்கி சேவையை பயன்படுத்தவும், அரசின் மானியங்கள் மற்றும் திட்டங்கள் நேரடியாக மக்களை சேரவும் ஜன்தன் வங்கி கணக்குகள் தொடங்கும் திட்டம் கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இந்த திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட கணக்குகளின் எண்ணிக்கை தற்போது 50 கோடியை கடந்து விட்டதாக மத்திய நிதியமைச்சகம் நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிட்டது. இதில் 56 சதவீதம் பெண்களுக்குரியது என்றும் அதில் கூறப்பட்டு இருந்தது.
ஜன்தன் கணக்குகளின் எண்ணிக்கை 50 கோடிக்கு மேல் உயர்ந்திருப்பதற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்து உள்ளார். இது ஒரு முக்கியமான மைல்கல் சாதனை என்றும் அவர் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது 'எக்ஸ்' தளத்தில், 'ஜன்தன் கணக்குகளின் எண்ணிக்கை 50 கோடிக்கு மேல் சென்றிருப்பதும், இதில் பாதிக்கும் மேற்பட்ட கணக்குகள் மகளிருக்கு சொந்தமானது என்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது. 67 சதவீத கணக்குகள் கிராமப்புற மற்றும் நடுத்தர நகர்ப்புற பகுதிகளில் தொடங்கப்பட்டுள்ளதால், நிதிச் சேர்க்கையின் பலன்கள் நாட்டின் ஒவ்வொரு மூலையையும் சென்றடைவதையும் நாம் உறுதிசெய்கிறோம்' என புகழாரம் சூட்டியுள்ளார்.