சித்து மூஸ்வாலா படுகொலை; கைது செய்யப்பட்ட தீபக் டினு காவலில் இருந்து தப்பியோட்டம்
|பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலா படுகொலையில் கைது செய்யப்பட்ட தீபக் டினு போலீசாரின் காவலில் இருந்து நள்ளிரவில் தப்பியோடி விட்டார்.
சண்டிகர்,
பஞ்சாபி பாடகரும், சமூக ஆர்வலருமான சித்து மூஸ்வாலா, கடந்த மே 29-ந்தேதி தனது காரில் சென்று கொண்டிருந்தபோது, அவரை பின் தொடர்ந்து வந்த கும்பல், அவரை கொடூரமான முறையில் சுட்டுக்கொன்றது. இந்த துப்பாக்கிச்சூட்டில் மேலும் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
சித்து மூஸ்வாலா கொலை செய்யப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு அவருக்கு வழங்கப்பட்டிருந்த காவல்துறை பாதுகாப்பு நீக்கிக்கொள்ளப்பட்ட நிலையில், இந்த கொலை சம்பவம் பஞ்சாப் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கு தொடர்பாக பஞ்சாப் மாநில போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய தீபக், கபில் பண்டிட் மற்றும் ராஜீந்தர் ஆகிய 3 பேர் மேற்கு வங்காளம்-நேபாளம் எல்லையில் உளவுத்துறை நடவடிக்கையின் பேரில் ஏ.ஜி.டி.எப். குழுவினரால் கடந்த செப்டம்பரில் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், போலீசாரின் காவலில் உள்ள தீபக் டினு, தப்பி சென்று விட்டார் என அதிகாரிகள் அதிர்ச்சி தெரிவித்து உள்ளனர். டினுவை தேடி பிடிக்கும் பணி நடந்து வருகிறது. மற்றொரு வழக்கில் கோயிந்வால் சாகிப் சிறையில் இருந்து மன்சா மாவட்ட போலீசாரால் டினு அழைத்து வரப்பட்டபோது, நேற்றிரவு இந்த சம்பவம் நடந்தது.
லாரன்ஸ் பிஷ்னோய் என்ற தாதாவின் நெருங்கிய உதவியாளராக செயல்பட்டு வந்தவர் டினு ஆவார். இதுபற்றி பத்திண்டா ஐ.ஜி. முக்வீந்தர் சிங் சின்னா கூறும்போது, இதுபற்றி நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம். போலீசார் தங்களுடைய பணியை செய்து வருகின்றனர். விரைவில் டினு பிடிபடுவார் என கூறியுள்ளார்.