< Back
தேசிய செய்திகள்
சித்து மூஸ் வாலாவின் கடைசி பாடல் யூடியூப்பிலிருந்து நீக்கம்..!
தேசிய செய்திகள்

சித்து மூஸ் வாலாவின் கடைசி பாடல் யூடியூப்பிலிருந்து நீக்கம்..!

தினத்தந்தி
|
26 Jun 2022 5:18 PM IST

பஞ்சாப் பாடகர் சித்து மூஸ் வாலாவின் கடைசி பாடல் யூடியூப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி

பஞ்சாபி பாடகரும் காங்கிரஸ் கட்சியின் பிரமுகருமான சித்து மூஸ் வாலா, அங்குள்ள மன்சா மாவட்டத்தில் கடந்த 29-ந்தேதி சுட்டுக்கொல்லப்பட்டார். கனடாவைச் சேர்ந்த கூலிப்படைத் தலைவர் கோல்டி பிரார், இந்த கொலைச் சம்பவத்துக்கு பொறுப்பேற்றாா். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சித்து மூஸ் வாலாவின் கடைசி பாடலான பஞ்சாபின் தண்ணீர் பிரச்சினை குறித்து பேசும் எஸ்ஒய்எல் (SYL) என்ற பாடல் யூடியூப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

சித்து மூஸ் வாலா சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்பு இசையமைத்த இந்த பாடல் சட்லஜ்-யமுனா இணைப்பு கால்வாயைப் பற்றிப் பேசும் பேசுகிறது. இந்த இசை வீடியோ கடந்த ஜூன் 23 அன்று யூடியூப்பில் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் இந்த பாடல் தற்போது யூடியூப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோவின் இணைப்பை கிளிக் செய்யும் போது, "அரசாங்கத்தின் சட்டப்பூர்வ புகாரின் காரணமாக இந்த உள்ளடக்கம் இந்த நாட்டின் டொமைனில் கிடைக்கவில்லை" என்று யூடியூப் தெரிவிக்கிறது. இந்த பாடல் பிரிக்கப்படாத பஞ்சாப், 1984 சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் ஆகியவற்றைப் பற்றி பேசுகிறது. மேலும் இந்த பாடலின் வீடியோவில் விவசாயிகளின் போராட்டத்தின் போது செங்கோட்டையில் சீக்கிய கொடி ஏற்றப்பட்டது இடம்பெற்றுள்ளது.

பதிவேற்றம் செய்யப்பட்டதிலிருந்து இந்த பாடல் தற்போது வரை 2.7 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது மற்றும் 33 லட்சம் லைக்குகளைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்