< Back
தேசிய செய்திகள்
சித்தேஸ்வர் சுவாமி உடல் தகனம்
தேசிய செய்திகள்

சித்தேஸ்வர் சுவாமி உடல் தகனம்

தினத்தந்தி
|
4 Jan 2023 3:00 AM IST

விஜயாப்புரா ஞானயோகா ஆசிரமத்தின் தலைவர் சித்தேஸ்வர் சுவாமியின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக அவரது உடலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

பெங்களூரு:

விஜயாப்புரா ஞானயோகா ஆசிரமத்தின் தலைவர் சித்தேஸ்வர் சுவாமியின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக அவரது உடலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

சித்தேஸ்வர் சுவாமி

கர்நாடக மாநிலம் விஜயாப்புரா மாவட்டம் திகோடா தாலுகாவில் உள்ள பிஜ்ஜரகி என்ற கிராமத்தில் ஞானயோகா ஆசிரமம் நடத்தி வந்தவர் சித்தேஸ்வர் சுவாமி (வயது 82).அவருக்கு கடந்த 5 நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து அந்த ஆசிரமத்திலேயே டாக்டா்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

ஆனாலும் அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க டாக்டர்கள் முடிவு செய்தனர். ஆனால் அதற்கு மறுத்த சித்தேஸ்வர் சுவாமி மடத்திலேயே வைத்து சிகிச்சை அளிக்க கேட்டுக்கொண்டார். இதனால் அவருக்கு மடத்தில் வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

மரணம்

இந்த நிலையில் ஆசிரம தலைவர் சித்தேஸ்வர் சுவாமிக்கு நேற்று முன்தினம் மாலை சுவாச பிரச்சினை ஏற்பட்டது. அத்துடன் ரத்த அழுத்தம் குறைந்தது. இதனால் உயிர் காக்கும் கருவிகள் மூலம் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் அவர் மரணம் அடைந்தார். அவரது மரண செய்தி இரவு 10 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, முன்னாள் பிரதமர் தேவேகவுடா, முன்னாள் முதல்-மந்திரிகள் எடியூரப்பா, குமாரசாமி, சித்தராமையா உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மடாதிபதிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர். சித்தேஸ்வர் சுவாமி மரணத்திற்கு அனுதாபம் தெரிவிக்கும் பொருட்டு விஜயாப்புரா மாவட்டத்தில் நேற்று பள்ளி-கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அவரது கிராமத்தில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

வாழ்க்கை நெறிகள்

விஜயாப்புரா மாவட்டம் பிஜ்ஜரகி கிராமத்தில் ஞானயோகா ஆசிரமம் நடத்தி வந்த அவர், கடந்த 1940-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ந் தேதி பிறந்தார். சிறு வயதிலேயே அவருக்கு அபாரமான பேசும் திறன் இருந்தது. அவர் பட்ட மேற்படிப்பு வரை படித்துள்ளார். தனது வாழ்க்கையின் இறுதி வரையில் ஆன்மிகம் குறித்து சொற்பொழிவு ஆற்றுவதை உயிர் மூச்சாக கொண்டு இருந்தார். இதனால் அவரை வட கர்நாடக மக்கள் 'நடமாடும் கடவுள்' என்று அன்பாக அழைத்தனர்.

செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர் என்றாலும் அந்த வாழ்க்கையை உதறிவிட்டு துறவறம் பூண்டு ஆசிரமத்தில் சேர்ந்தார். அவர் சொற்பொழிவு ஆற்றும்போது, மக்களுக்கு நல்ல ஒழுக்கங்கள், பண்புகள், வாழ்க்கை நெறிகள், தத்துவங்களை எடுத்து கூறினார். அவரது சொற்பொழிவு திறனால் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் அவரை பின்தொடர்ந்தனர். மேலும் அவர் தனது ஆசிரமத்தில் தினமும் காலையில் 45 நிமிடங்கள் சொற்பொழிவு ஆற்றுவார். அதை காண மக்கள் அதிகளவில் ஆசிரமத்திற்கு வருவார்கள்.

பசவராஜ் பொம்மை- எடியூரப்பா

இந்த நிலையில் நேற்று அதிகாலை சித்தேஸ்வர் சுவாமியின் உடல் மடத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் விஜயாப்புராவில் உள்ள ராணுவ பள்ளி வளாகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு பக்தர்கள் இறுதி அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டது.

அங்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, மத்திய மந்திரிகள் பிரகலாத்ஜோஷி, ஷோபா, கர்நாடக போக்குவரத்து மந்திரி ஸ்ரீராமுலு, வீட்டு வசதி மந்திரி சோமண்ணா உள்பட முக்கிய பிரமுகர்கள் நேரில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

மக்கள் கூட்டம் அலைமோதியது

அவரது சொற்பொழிவால் ஈர்க்கப்பட்ட லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். முஸ்லிம்களும் வந்து சுவாமியின் உடலுக்கு கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் நேற்று அதிகாலையில் இருந்து மாலை வரை பக்தர்களின் கூட்டம் கொஞ்சமும் குறையாமல் இருந்தது. சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் வரிசையில் காத்து இருந்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.

சாரை... சாரையாக மாணவ-மாணவிகள், பெண்கள், பக்தர்கள் குடும்பத்தினருடன் திரண்டு வந்தனர். இதனால் ராணுவ பள்ளி மைதானத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் பக்தர்களின் வருகையை முறைப்படுத்தி கொண்டனர்.

அரசு மரியாதை

இனி அவரை எப்போது காண்போம் என்று கூறி இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் கண்ணீர் விட்டு அழுதனர். பின்னர் மாலையில் அவரது உடலுக்கு கர்நாடக அரசு சார்பில் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

சித்தேஸ்வர் சுவாமியின் உடலை மாலை 5 மணிக்கு தகனம் செய்ய முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் வந்ததால், அனைவரும் அஞ்சலி செலுத்தும் வகையில் மாலை 6 மணி வரை பள்ளி மைதானத்தில் உடல் வைக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு அவரது உடல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஏற்றப்பட்டது. பின்னர் பிஜ்ஜரகி கிராமத்தில் உள்ள ஞானயோகா ஆசிரமத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து சித்தேஸ்வர் சுவாமிக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் ஆசிரமத்திற்கு இரவு 8 மணி அளவில் வந்தது. அங்கு ஆசிரம நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் சித்தேஸ்வர் சுவாமியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

உடல் தகனம்

அதைத்தொடர்ந்து ஆசிரம வளாகத்தில் சித்தேஸ்வர் சுவாமியின் உடல் இரவு 8.50 மணிக்கு தகனம் செய்யப்பட்டது.

தனது உடலுக்கு இறுதிச்சடங்குகள் செய்ய வேண்டாம் என்றும், தனது உடலை அடக்கம் செய்ய கூடாது என்றும், மடத்திலேயே தகனம் செய்ய வேண்டும் என்றும் அவர் கடிதம் எழுதி வைத்திருந்தார். எனவே அவரது விருப்பப்படியே எந்த சடங்கும் செய்யப்படவில்லை. சந்தன கட்டைகள் மூலம் அவரது உடல் எரியூட்டப்பட்டது.

மேலும் செய்திகள்