< Back
தேசிய செய்திகள்
காவிரி நதிநீர் வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை; டெல்லியில் சித்தராமையா இன்று ஆலோசனை
தேசிய செய்திகள்

காவிரி நதிநீர் வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை; டெல்லியில் சித்தராமையா இன்று ஆலோசனை

தினத்தந்தி
|
20 Sept 2023 3:44 AM IST

காவிரி நதி நீர் விவகாரம் தொடர்பான வழக்கு நாளை (வியாழக்கிழமை) சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. இதுதொடர்பாக கர்நாடக எம்.பி.க்கள், சட்ட நிபுணர்களுடன் டெல்லியில் இன்று (புதன்கிழமை) முதல்-மந்திரி சித்தராமையா அவசர ஆலோசனை நடத்துகிறார்.

பெங்களூரு:

காவிரி நதி நீர் விவகாரம் தொடர்பான வழக்கு நாளை (வியாழக்கிழமை) சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. இதுதொடர்பாக கர்நாடக எம்.பி.க்கள், சட்ட நிபுணர்களுடன் டெல்லியில் இன்று (புதன்கிழமை) முதல்-மந்திரி சித்தராமையா அவசர ஆலோசனை நடத்துகிறார்.

காவிரி நதி நீர்

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக தமிழ்நாடு-கர்நாடகம் இடையே நீண்டகாலமாக பிரச்சினை இருந்து வருகிறது. மழை அதிகம் பெய்யும் காலத்தில் காவிரியில் கணிசமான நீரை கர்நாடகம் திறந்து வருகிறது. ஆனால் மழை சரியாக பெய்யாத ஆண்டுகளில் தமிழகத்திற்கும், கர்நாடகத்திற்கும் இடையே காவிரி நீரை பங்கிட்டுக் கொள்வதில் பிரச்சினை ஏற்பட்டு வருவது வாடிக்கையாக உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திற்கு காவிரியில் கர்நாடகம் 177.25 டி.எம்.சி.(ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கன அடி) தண்ணீரை வழங்க வேண்டும். ஆனால் மழை சரியாக பெய்யாத போது இடர்பாட்டு சூத்திரத்தை கையாள வேண்டும் என்றும் கர்நாடகம் வலியுறுத்துகிறது. ஆனால் அதற்கு தமிழக அரசு மறுத்து வருகிறது.

தண்ணீர் திறப்பு

இதற்கிடையே குறுவை சாகுபடிக்காக தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட கர்நாடகத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அந்த மனு மீதான விசாரணை நாளை(வியாழக்கிழமை) விசாரணைக்கு வருகிறது.

இதற்கிடையே காவிரி மேலாண்மை ஆணையம் நேற்று முன்தினம், தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீரை திறக்கும்படி கர்நாடகத்திற்கு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை தங்களால் அமல்படுத்த முடியாது என்று கர்நாடக அரசு கூறியது. ஆனால் தமிழகத்திற்கு நேற்று காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வினாடிக்கு 3,834 கனஅடி நீர் தமிழகத்திற்கு காவிரியில் செல்கிறது.

டெல்லியில் இன்று ஆலோசனை

இதை கண்டித்து மண்டியா விவசாயிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் கர்நாடக அரசுக்கு நெருக்கடியான நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் காவிரி நதி நீர் விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது தொடர்பாக முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் கர்நாடக எம்.பி.க்கள், சட்ட நிபுணர்களின் அவசர ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது.

இதில் தமிழகத்திற்கு காவிரி நீரை திறப்பதால் கர்நாடகத்திற்கு ஏற்பட்டுள்ள சிக்கல், சுப்ரீம் கோர்ட்டில் நாளை(வியாழக்கிழமை) நடைபெறும் விசாரணையின்போது கர்நாடகம் தரப்பில் எடுத்து வைக்க வேண்டிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

மத்திய மந்திரிகள்

கர்நாடகத்தில் நிலவும் வறட்சி மற்றும் தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க முடியாத நிலை குறித்து மத்திய அரசுக்கு தெரிவிப்பது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. இதில் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், கர்நாடகத்தை சேர்ந்த மத்திய மந்திரிகள், எம்.பி.க்கள், சட்ட நிபுணர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சித்தராமையா நேற்று இரவு 9 மணியளவில் விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். இன்று(புதன்கிழமை) காலை 8.30 மணிக்கு ஒரு நட்சத்திர ஓட்டலில் எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை கர்நாடக அரசின் டெல்லி பிரதிநிதி ஜெயச்சந்திரா மேற்கொண்டுள்ளார்.

மேலும் செய்திகள்