நாடாளுமன்ற தேர்தலையொட்டி இன்று எம்.எல்.ஏ.க்களுடன் சித்தராமையா ஆலோசனை
|நாடாளுமன்ற தேர்தலையொட்டி முதல்-மந்திரி சித்தராமையா துமகூரு, தார்வார் உள்ளிட்ட 6 மாவட்டங்களின் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட பொறுப்பு மந்திரிகள் மற்றும் எம்.எல்.சி.க்களுடன் பெங்களூருவில் இன்று(திங்கட்கிழமை) ஆலோசனை நடத்துகிறார். அப்போது அவர் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.எல்.சி.க்களின் கோரிக்கைகளையும் கேட்க உள்ளார்.
பெங்களூரு:-
கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கடந்த மாதம் (ஜூலை) 27-ந் தேதி பெங்களூருவில் நடைபெற்றது.
கலந்து ஆலோசனை
இதில் கலந்து கொண்ட எம்.எல்.ஏ.க்கள் சிலர், மந்திரிகள் மீது புகார் கூறினர். அதாவது எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.பட்டீல், பசவராஜ் ராயரெட்டி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர், மந்திரிகள் தங்களை மதிப்பது இல்லை என்றும், தங்களின் சுயமரியாதைக்கு பங்கம் ஏற்பட்டால் பதவியை ராஜினாமா செய்துவிடுவோம் என்றும் எச்சரிக்கை விடுத்தனர். அவர்களை சமாதானப்படுத்திய முதல்-மந்திரி சித்தராமையா, இனி மாதம் ஒரு முறை மாவட்டந்தோறும் எம்.எல்.ஏ.க்களின் கூட்டத்தை கூட்டி பிரச்சினைகள் கேட்டு தீர்க்கப்படும் என்றார்.
இந்த நிலையில் மாவட்டந்தோறும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் கலந்து ஆலோசனை நடத்தும் கூட்டம் இன்று(திங்கட்கிழமை) தொடங்குகிறது. முதல்-மந்திரி சித்தராமையா இன்று 6 மாவட்ட பொறுப்பு மந்திரிகள், அந்த மாவட்டங்களின் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.எல்.சி.க்களின் கூட்டத்தை பெங்களூருவில் கூட்டியுள்ளார். இதில் துமகூரு, சித்ரதுர்கா, யாதகிரி, பல்லாரி, தார்வார், பாகல்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களின் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கோரிக்கைகளை நிறைவேற்ற...
இந்த கூட்டம் காலை 11 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில்
எம்.எல்.ஏ.க்களின் கோரிக்கைகளை சித்தராமையா கேட்க உள்ளார். அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற அவர் தயாராக உள்ளார். மேலும் நாடாளுமன்ற தேர்தல் வருவதையொட்டி அதில் கட்சியை பலப்படுத்துவது குறித்தும், அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் வகையில் நிர்வாகிகளை தயார்படுத்தும்படியும் அறிவுரை வழங்க உள்ளார்.
சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் மேலிட தலைவர்கள், கட்சியில் கருத்து வேறுபாடு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும், அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு உத்தரவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து வரும் நாட்களில் பிற மாவட்டங்களின் எம்.எல்.ஏ.க்களை அழைத்து சித்தராமையா குறைகளை கேட்கிறார். வளர்ச்சி பணிகள் குறித்து அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை முடிந்தவரை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பார் என்று கூறப்படுகிறது.