கர்நாடக சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்கிறார் சித்தராமையா - புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு
|2024-25-ம் ஆண்டுக்கான கர்நாடக பட்ஜெட்டை முதல்-மந்திரி சித்தராமையா இன்று தாக்கல் செய்கிறார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 12-ந் தேதி தொடங்கியது. இந்த நிலையில் 2024-25-ம் ஆண்டுக்கான கர்நாடக பட்ஜெட் இன்று (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்யப்படுகிறது. நிதித்துறையை தன்வசம் வைத்துள்ள முதல்-மந்திரி சித்தராமையா, காலை 10.15 மணிக்கு இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். 15-வது முறையாக முதல்-மந்திரி சித்தராமையா பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.
சுமார் ரூ.3½ லட்சம் கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால், புதிய வரிகள் விதிக்கப்பட மாட்டாது என்றே சொல்லப்படுகிறது. ஏற்கனவே உத்தரவாத திட்டங்கள் பெயரில் இலவச திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு விட்டதால், இதில் கவர்ச்சிகரமான திட்டங்கள் இடம் பெற வாய்ப்பு இல்லை என்று சொல்கிறார்கள்.
உத்தரவாத திட்டங்களுக்கு சுமார் ரூ.75 ஆயிரம் கோடி ஒதுக்கப்படலாம். சுகாதாரம், பள்ளி கல்வி, நீர்ப்பாசனத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது. கர்நாடக அரசுக்கு அதிக வருவாய் ஈட்டி தரும் தலைநகர் பெங்களூருவின் வளர்ச்சி பணிகளுக்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூருவில் புதிய மெட்ரோ ரெயில் திட்டங்கள், சாலை மேம்பாட்டு திட்டங்கள், மேம்பாலங்கள் கட்டும் பணிகளுக்கு நிதி ஒதுக்கப்படலாம். நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளதால் புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு உள்ளன.