எதிர்க்கட்சி தலைவரை பா.ஜனதாவால் நியமிக்க முடியவில்லை; முதல்-மந்திரி சித்தராமையா சாடல்
|கூட்டத்தொடர் தொடங்கி 3 நாட்கள் ஆகியும் எதிர்க்கட்சி தலைவரை கூட பா.ஜனதாவால் நியமிக்க முடியவில்லை என்று சட்டசபையில் முதல்-மந்திரி சித்தராமையா சாடியுள்ளார்.
பெங்களூரு:
கூட்டத்தொடர் தொடங்கி 3 நாட்கள் ஆகியும் எதிர்க்கட்சி தலைவரை கூட பா.ஜனதாவால் நியமிக்க முடியவில்லை என்று சட்டசபையில் முதல்-மந்திரி சித்தராமையா சாடியுள்ளார்.
யத்னால் எம்.எல்.ஏ. குறுக்கிட்டார்
கர்நாடக சட்டசபையின் கூட்டுக்கூட்டம் கடந்த 3-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. சட்டசபை கூட்டத்தின் 2-வது நாளான நேற்று முன்தினம் காங்கிரஸ் அரசு அறிவித்த 5 இலவச திட்டங்களையும் நிறைவேற்றாதது குறித்து விவாதிக்க நேரம் ஒதுக்க கோரி பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் தொடர் தர்ணாவில் ஈடுபட்டதால், சபை முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, நேற்று 3-வது நாளாக சட்டசபைகூடியது. அப்போது சபையை நடத்த ஒத்துழைப்பு அளிக்கும்படியும், பூஜ்ஜிய நேரத்தில் 5 வாக்குறுதி திட்டங்கள் பற்றி விவாதிக்க அனுமதி வழங்குவதாகவும் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களிடம் சபாநாயகர் யு.டி.காதர் தெரிவித்தார்.
இதையடுத்து, பா.ஜனதா உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் பா.ஜனதா மூத்த எம்.எல்.ஏ.வான அசோக் எழுந்து ஒத்தி வைப்பு தீர்மானத்தின் மீது பேசிக் கொண்டிருந்தார். அப்போது பா.ஜனதாவை சேர்ந்த யத்னால் எம்.எல்.ஏ.வும் எழுந்து குறுக்கிட்டு பேசினார். 2 பேரும் பேசியதால் திடீரென்று முதல்-மந்திரி சித்தராமையா எழுந்து பேசினார்.
தலைவரை நியமிக்க முடியவில்லை
அவர் பேசுகையில், சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கி 3 நாட்கள் ஆகி விட்டது. பா.ஜனதாவால் இன்னும் எதிர்க்கட்சி தலைவரை நியமிக்க முடியவில்லை. எதிர்க்கட்சி தலைவர் இல்லாமலேயே கூட்டத்தொடர் நடக்கிறது. யத்னால் அடிக்கடி எழுந்து சத்தமாக பேசுவதால், எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைத்து விடும் என்று நினைக்கிறாரா?. சபாநாயகர் பேசுவதற்கு அனுமதி கொடுக்கும் வரை உறுப்பினர்கள் அமைதியாக இருக்க வேண்டும், என்றார்.
இதனால் யத்னால் எம்.எல்.ஏ.வால் எதுவும் பேச முடியவில்லை. அதன்பிறகு முதல்-மந்திரி சித்தராமையா தொடர்ந்து பேசியதாவது:-
பயந்து விட மாட்டோம்
சட்டசபை தேர்தலின் போது 5 இலவச திட்டங்களை செயல்படுத்துவோம் என்று மக்களுக்கு வாக்குறுதி அளித்தோம். அதன்படி, 3 திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறோம். 4-வது வாக்குறுதியை நிறைவேற்றும் பணிகள் நடக்கிறது. 5-வது வாக்குறுதி இன்னும் 6 மாதம் கழித்து நிறைவேற்றப்படும். நாங்கள் கொடுத்த 5 இலவச திட்டங்களையும் இந்த நிதி ஆண்டிலேயே நிறைவேற்றுவோம்.
அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அதுபற்றி பா.ஜனதாவினர் பேசுவதில்லை. அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்வதை எதிர்க்கிறீர்களா? என்று கேட்டால், அதற்கு பதில் சொல்லாமல் பா.ஜனதாவினர் ஓடி, ஒளிந்து கொள்கின்றனர். சபையில் பா.ஜனதாவினர் அனைவரும் எழுந்து நின்று பேசுவதால், நாங்கள் பயந்து விட மாட்டோம்.
எதிர்க்கட்சி வரிசையில்...
உங்கள் ஆட்சியில் (பா.ஜனதா) எந்த பணிகளும் நடைபெறாமல் இருந்ததுடன், மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத காரணத்தால் தான் எதிர்க்கட்சி வரிசையில் உங்களை மக்கள் அமர வைத்துள்ளனர். அப்படி இருந்தும் உங்களை மாற்றி கொள்ளவில்லை. கடந்த 2018-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் நீங்கள் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், உங்களது முகத்தை பார்த்து கொள்ளுங்கள். சட்டசபை தேர்தலில் நாங்கள் கொடுத்த 5 வாக்குறுதிகளையும் யார் என்ன சொன்னாலும், நிறைவேற்றியே தீருவோம்.
இவ்வாறு சித்தராமையா பேசினார்.