மத்திய அரசு அரிசி தர மறுப்பு; தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களின் முதல்-மந்திரிகளுடன் சித்தராமையா பேச்சு
|அன்னபாக்ய திட்டத்திற்கு மத்திய அரசு அரிசி தர மறுத்த நிலையில், தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களின் முதல்-மந்திரிகளுடன் சித்தராமையா பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சத்தீஷ்கார் அரசு 1½ லட்சம் டன் அரிசி தர சம்மதம் தெரிவித்துள்ளது.
பெங்களூரு:
அன்னபாக்ய திட்டம்
கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் கொடுத்த 5 வாக்குறுதிகளையும் நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் எடுத்து வருகிறார்கள். 5 இலவச திட்டங்களில் அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ளும் திட்டம் மட்டும் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது.
மற்ற 4 திட்டங்கள் இன்னும் செயல்படுத்தப்படாமல் இருக்கிறது. குறிப்பாக அன்னபாக்ய திட்டத்தின் கீழ் பி.பி.எல்.(வறுமை கோட்டிற்கு கீழ் இருப்பவர்கள்) குடும்ப அட்டைதாரர்களுக்கு குடும்ப உறுப்பினர்களை கணக்கிட்டு மாதந்தோறும் தலா 10 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என்று முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்திருந்தார். இதில், 5 கிலோ அரிசி மத்திய அரசு இலவசமாக வழங்கி வருகிறது. மீதி 5 கிலோ அரிசியை மத்திய அரசிடம் இருந்து ரூ.34-க்கு வாங்கி வினியோகிக்க காங்கிரஸ் அரசு முடிவு செய்திருந்தது.
திட்டம் தள்ளி வைக்கப்படுமா?
முதலில் அரிசி வழங்க சம்மதித்து இருந்த மத்திய உணவு கழகம், பின்னர் கர்நாடகத்திற்கு அரிசி வழங்க மறுத்து விட்டது. இதன் காரணமாக மத்திய அரசு மீது சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் குற்றச்சாட்டு கூறி வருகிறார்கள். அதே நேரத்தில் மத்திய அரசிடம் ஆலோசிக்காமல் கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்குவதாக காங்கிரஸ் அறிவித்தது தவறு என பா.ஜனதா தலைவர்கள் கூறி வருகின்றனர். இந்த இலவச அரிசி விவகாரத்தில் 2 கட்சிகளின் தலைவர்களும் வார்த்தை போர் நடத்தி வருகின்றனர்.
அதே நேரத்தில் கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்கும் திட்டம் ஜூலை 1-ந் தேதி முதல் வழங்கப்படும் என்று சித்தராமையா அறிவித்திருந்தார். தற்போது மத்திய அரசு அரிசி வழங்க மறுத்து இருப்பதால், வருகிற 1-ந் தேதி அன்ன பாக்ய திட்டத்தின் கீழ் 10 கிலோ இலவச அரிசி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுமா? இல்லையெனில் தள்ளி வைக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் திட்டமிட்டபடி 10 கிலோ அரிசி வழங்குவோம் என காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகின்றனர்.
சந்திரசேகர ராவுடன் பேச்சு
இந்த நிலையில், அன்னபாக்ய திட்டத்தை நிறைவேற்றுவதற்காக அண்டை மாநிலங்களான தெலுங்கானா, ஆந்திரா மற்றும் பஞ்சாப், மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து அரிசி கொள்முதல் செய்ய கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆந்திர அரசு தங்களிடம் அரிசி கையிருப்பு இல்லை என்று கூறியுள்ளது. தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவுடன், சித்தராமையா தொலைபேசியில் பேசி அரிசி கொள்முதல் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஆனால் 2 லட்சம் டன்னுக்கும் மேற்பட்ட அரிசியை மாதந்தோறும் வழங்க சாத்தியமில்லை என்று தெலுங்கானா அரசும் கைவிரித்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. முதலில் அந்த மாநில அரசு அரிசி கொடுக்க சம்மதித்ததாக கூறப்பட்டது. அது உண்மை இல்லை என்பதை முதல்-மந்திரி சித்தராமையா உறுதி செய்துள்ளார்.
சித்தராமையா ஆலோசனை
இதையடுத்து, அன்னபாக்ய திட்டத்தை நிறைவேற்றுவதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், திட்டமிட்டபடி ஜூலை 1-ந் தேதி 10 கிலோ அரிசி வழங்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து உணவுத்துறை அதிகாரிகளுடன் நேற்று மாலையில் முதல்-மந்திரி சித்தராமையா அவசர ஆலோசனை நடத்தினார். ஏனெனில் மத்திய அரசிடம் இருந்து ஒரு கிலோ அரிசியை ரூ.34-க்கு வாங்க அரசு முடிவு செய்திருந்தது. தற்போது வெளிமாநிலங்களில் இருந்து அரிசி வாங்க பேச்சு வார்த்தை நடப்பதால், அதன்விலை அதிகமாக உள்ளது.
அத்துடன் அந்த மாநிலங்களில் இருந்து கர்நாடகத்திற்கு அரிசியை கொண்டு வர ஆகும் போக்குவரத்து செலவும் உயரும். இதனால் அன்னபாக்ய திட்டத்தின் கீழ் கூடுதல் அரிசி வழங்க அரசுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படும். இதுபற்றியும், அரிசி தட்டுப்பாடு உள்ளதால் 8 கிலோ அரிசியுடன் 2 கிலோ ராகியும், வடகர்நாடக மாவட்ட மக்களுக்கு சோளம் வழங்குவது குறித்தும் அதிகாரிகளுடன் சித்தராமையா ஆலோசித்ததாக கூறப்படுகிறது. முன்னதாக இந்த விவகாரம் குறித்து பெங்களூருவில் முதல்-மந்திரி சித்தராமையா நிருபர்களிடம் கூறியதாவது:-
தெலுங்கானாவில் இருப்பு இல்லை
கர்நாடக அரசின் அன்னபாக்ய திட்டத்தின் கீழ் 10 கிலோ அரிசி வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. தெலுங்கானா அரசு கர்நாடகத்திற்கு அரிசி தர சம்மதித்து இருப்பதாக வந்த தகவல்கள் உண்மை இல்லை. அந்த மாநில அரசிடம் போதுமான அளவு அரிசி இருப்பு இல்லை.
அதனால் அவர்களிடம் இருந்து அரிசி வாங்க முடியவில்லை. தெலுங்கானா மாநில முதல்-மந்திரியுடன் நானே தொடர்பு கொண்டு பேசினேன். ஆந்திர மாநில அரசுடன், தலைமை செயலாளர் வந்திதா சர்மாவை பேச்சுவார்த்தை நடத்தும்படி அறிவுறுத்தி இருக்கிறேன். இதுபோல், மற்ற மாநில அரசுகளுடன் மந்திரி கே.எச்.முனியப்பா மற்றும் அதிகாரிகள் பேசி வருகின்றனர்.
சத்தீஸ்கர் 1½ லட்சம் டன் அரிசி
சத்தீஸ்கர் மாநிலம் 1½ லட்சம் டன் அரிசி வழங்க சம்மதம் தெரிவித்துள்ளது. அந்த மாநில அரிசியின் விலை சற்று அதிகமாக இருக்கிறது. அத்துடன் போக்குவரத்து செலவும் அதிகமாகும். இதுபற்றி அதிகாரிகளுடன் கலந்து ஆலோசிக்கப்படும். அதன்பிறகு, சத்தீஸ்கர் அரசிடம் இருந்து அரிசி கொள்முதல் செய்வது பற்றி இறுதி முடிவு எடுக்கப்படும்.
வெளிமாநிலங்களில் இருந்து அரிசி கொள்முதல் செய்வதால் கமிஷன் பெற முயற்சிப்பதாகவும், கர்நாடக விவசாயிகளிடம் இருந்து அரிசி வாங்க வேண்டும் என்று விஜயேந்திரா கூறி இருப்பது பற்றியும் நீங்கள்(நிருபர்கள்) கேட்கிறீர்கள். மாநிலத்தில் அரிசி கிடைத்தால் விஜயேந்திராவே கொடுக்கட்டும். இப்படி பேசும் விஜயேந்திராவுக்கு சொந்தமான அரிசி ஆலையில் அரிசி உள்ளதா?.
இவ்வாறு அவர் கூறினார்.
இன்று இறுதி முடிவு
இந்த விவகாரம் குறித்து உணவுத்துறை மந்திரி கே.எச்.முனியப்பா கூறுகையில், 'அன்ன பாக்ய திட்டத்தின் கீழ் இலவச அரிசி வழங்கும் திட்டத்தை நிறைவேற்ற பல்வேறு மாநில அரசுகளுடன் அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். சில மாநிலங்களுக்கு அரசு அதிகாரிகள் நேரில் சென்று, அந்த மாநில அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். மத்திய அரசு அரிசி கொடுப்பதாக கூறிவிட்டு, தற்போது தர மறுப்பதால், இந்த நிலை உருவாகி இருக்கிறது.
மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறது. ஏழைகளுக்கு அரிசி கொடுப்பதில் மத்திய அரசு அரசியல் செய்கிறது. இலவச அரிசி கொடுக்கும் திட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும். ஜூலை 1-ந் தேதியே அரிசி வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்று(அதாவது நேற்று) எந்த முடிவும் எடுக்கப்படாது. நாளை(அதாவது இன்று) இலவச அரிசி வழங்கும் திட்டம் பற்றி இறுதி முடிவு எடுத்து அறிவிக்கப்படும்', என்றார்.