< Back
தேசிய செய்திகள்
மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவில் பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கு உள் ஒதுக்கீடு; முதல்-மந்திரி சித்தராமையா வலியுறுத்தல்
தேசிய செய்திகள்

மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவில் பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கு உள் ஒதுக்கீடு; முதல்-மந்திரி சித்தராமையா வலியுறுத்தல்

தினத்தந்தி
|
21 Sept 2023 3:54 AM IST

மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவில் பிற்படுத்தப்பட்ட பிரிவு பெண்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று முதல்-மந்திரி சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.

பெங்களூரு:

மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவில் பிற்படுத்தப்பட்ட பிரிவு பெண்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று முதல்-மந்திரி சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக முதல்-மந்திரி சித்தராமையா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

பெண்களுக்கு அநீதி

மத்திய அரசு மக்களவையில் நாடாளுமன்றம், சட்டசபைகளில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்துள்ளது. இதை நான் வரவேற்கிறேன். இந்த இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட பிரிவுகளை சேர்ந்த பெண்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும். உள் ஒதுக்கீடு வழங்காவிட்டால், அந்த பிரிவு பெண்களுக்கு அநீதி இழைக்கப்படும்.

பாலின வேறுபாட்டுடன் சாதி ஏற்றத்தாழ்வையும் கொண்டுள்ள இந்தியாவில் பின்தங்கிய பிரிவுகளை சேர்ந்த பெண்கள் பிறருடன் போட்டி போட்டு அரசியல் பிரதிநிதித்துவம் பெறுவது என்பது கடினமான விஷயம். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பெண்களுக்கு ஏற்கனவே இட ஒதுக்கீடு இருப்பதால், அந்த சமூக பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது பிரச்சினை இல்லை.

மகளிர் இட ஒதுக்கீடு

இந்த மசோதாவை ஆய்வு செய்யும்போது, பெண்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்குவதை விட அரசியல் ஆதாயம் பெற வேண்டும் என்பது தெரிகிறது. இதே வடிவத்தில் மசோதாவை நிறைவேற்றினால் பெண்கள் அரசியல் அதிகாரம் பெற இன்னும் 20 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். கடந்த 2010-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மாநிலங்களவையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றியது.

ஆனால், அந்த மசோதாவில் தற்போது உள்ள மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது. அதனால் இந்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்ற வேண்டும். சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு, தொகுதிகள் மறுவரையறை பணிகள் நிறைவடைய இன்னும் 20 ஆண்டுகள் ஆகும். அதன் பிறகே இந்த சட்டம் அமலுக்கு வரும். பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது என்பது காங்கிரசின் மனதில் தோன்றிய எண்ணம். அது தான் தற்போது சட்ட வடிவம் பெறுகிறது.

நாட்டுக்கே தெரியும்

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்து தற்போது உத்தரபிரதேச முதல்-மந்திரியாக உள்ள யோகி ஆதித்யநாத் என்ன கருத்து கூறினார் என்பது நாட்டுக்கே தெரியும். தற்போதும் அவரது கருத்து இதே தானா? என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்