காவிரி விவகாரத்தில் இடர்பாட்டு சூத்திரமும், மேகதாது அணையும் தான் ஒரே தீர்வு; முதல்-மந்திரி சித்தராமையா பேட்டி
|காவிரி விவகாரத்தில் இடர்பாட்டு சூத்திரமும், மேகதாது அணையும் தான் ஒரே தீர்வு என்று முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.
பெங்களூரு:
காவிரி விவகாரத்தில் இடர்பாட்டு சூத்திரமும், மேகதாது அணையும் தான் ஒரே தீர்வு என்று முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.
காவிரி பிரச்சினை
கர்நாடகம், தமிழகம் இடையே காவிரி நீரை பங்கிட்டுக் கொள்வதில் பிரச்சினை இருந்து வருகிறது. இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்பேரில் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்து விவசாயிகள், கன்னட அமைப்புகள் உள்பட பல்வேறு அமைப்புகளும், பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்) உள்ளிட்ட கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில் நேற்று மைசூருவுக்கு முதல்-மந்திரி சித்தராமையா வந்திருந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது காவிரி விவகாரம் குறித்து கூறியதாவது:-
மேகதாது அணை
காவிரி பிரச்சினையில் கர்நாடக அரசு மீது பா.ஜனதா மற்றும் ஜனதா தளம்(எஸ்) உள்ளிட்ட கட்சிகள் குற்றச்சாட்டு கூறி வருகிறது. காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசு தோல்வி அடையவில்லை. கர்நாடகத்தையும், கர்நாடக மக்கள் மற்றும் விவசாயிகளையும் பாதுகாப்பதில் இருந்து எனது நிர்வாகம்(காங்கிரஸ் ஆட்சி) என்றும் பின்வாங்கியதில்லை. காவிரி பிரச்சினைக்கு ஒரே தீர்வு இடர்பாட்டு சூத்திரம் மற்றும் மேகதாது அணை தான்.
பெங்களூரு முழுஅடைப்பு போராட்டத்தின் பின்னணியில் பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் உள்ளன. ஆனால் இந்த போராட்டத்திற்கு பெரிய அளவில் மக்கள் ஆதரவு வழங்கவில்லை. ஏராளமான பொது நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், சேவைகள் வழக்கம்போல் செயல்பட்டன. ஆனால் பொதுவெளியில் மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது. மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர்.
144 தடை உத்தரவு
பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் காவிரி விவகாரத்தில் அரசியல் செய்வது துரதிர்ஷ்டவசமானது. அவர்கள் அரசியல் ஆதாயத்துக்காக போராட்டம் நடத்துகிறார்களே தவிர, மக்கள் மற்றும் மாநில நலனுக்காக இல்லை. ஜனநாயகத்தில் போராட்டம் நடத்தவும், முழுஅடைப்புக்கு அழைப்பு விடுக்கவும் அனைவருக்கும் உரிமை உள்ளது. ஆனால் யாரும் சட்டத்தை தங்கள் கையில் எடுத்து மக்களுக்கும், பொது சொத்துக்களுக்கும் இடையூறு ஏற்படுத்த அனுமதி இல்லை. அதற்காக தான் கோர்ட்டு சில வழிகாட்டுதல்களை வகுத்துள்ளது. 144 தடை உத்தரவும் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.
போராட்டம் நடத்துபவர்கள் நடத்தட்டும், அவர்களை ஒடுக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை. ஆனால் காவிரி பிரச்சினையை அரசியல் ஆக்கி ஆதாயம் தேட வேண்டாம். தமிழகத்தில் ஆட்சி புரியும் தி.மு.க. கட்சியின் 'பி டீம்' என்று கர்நாடக காங்கிரஸ் கட்சியை ஜனதா தளம்(எஸ்) கட்சியின் மூத்த தலைவர் குமாரசாமி விமர்சித்துள்ளார். அப்படியானால் பா.ஜனதாவுடன் தற்போது கூட்டணி வைத்துக் கொண்ட ஜனதா தளம்(எஸ்) கட்சியை என்னவென்று அழைப்பது?. அரசியல் ஆதாயத்துக்காக குமாரசாமி பேசக்கூடாது.
அனுகூலமாக இருக்கும்
காவிரி பிரச்சினையில் பிரதமர் மோடி தலையிட வேண்டும் என்று முன்னாள் பிரதமர் தேவேகவுடா கடிதம் எழுதி உள்ளார். அதை நான் வரவேற்கிறேன். ஆனால் அவர் காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசு தோல்வி அடைந்துவிட்டதாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எங்களது நோக்கம் இடர்பாட்டு காலத்தில் காவிரி நீரை பங்கிட்டுக் கொள்வதில் சூத்திரம் அமைப்பது தான். இதைத்தான் நாங்கள் சுப்ரீம் கோர்ட்டு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தில் கூறிவருகிறோம். ஏனெனில் காவிரி விவகாரத்தில் இடர்பாட்டு சூத்திரம் முக்கிய பங்கு வகிக்கும்.
இடர்பாட்டு சூத்திரத்தை தவிர மற்றொரு தீர்வு வேண்டும் என்றால் அது மேகதாதுவில் அணை கட்டுவது தான். அதிக மழை பெய்யும் காலத்தில் மேகதாது அணையில் 67 டி.எம்.சி.(ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கன அடி) தண்ணீரை சேமித்து வைக்க முடியும். அந்த தண்ணீரை இடர்பாட்டு காலத்தில் தமிழகத்திற்கு திறந்து விடலாம். அப்படி செய்தால் அது இருமாநிலங்களுக்கும் அனுகூலமாக இருக்கும்.
ஆணித்தரமாக முன்வைக்கப்படும்
காவிரி விவகாரத்தில் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டு நான்(சித்தராமையா) எழுதிய கடிதத்திற்கு இதுவரையில் பதில் வரவில்லை. இதுபற்றி கர்நாடகத்தில் உள்ள பா.ஜனதாவின் 25 எம்.பி.க்களும் பிரதமர் மோடிக்கு அழுத்தம் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். காவிரி விவகாரத்தில் பிரதமரும், சுப்ரீம் கோர்ட்டும் தலையிட்டு தீர்வு காண வேண்டும்.
காவிரி விவகாரத்தில் பா.ஜனதா ஆட்சியின் போது அமைக்கப்பட்ட சட்ட நிபுணர் குழுதான் இப்போதும் உள்ளது. அதனால் காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசு தோல்வி அடைந்துவிட்டதாக கூறுவதை ஏற்க முடியாது. அடுத்த முறை சுப்ரீம் கோர்ட்டில் இவ்வழக்கு விசாரணைக்கு வரும்போது கர்நாடகத்தின் வாதங்கள் ஆணித்தரமாக முன்வைக்கப்படும்.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.