< Back
தேசிய செய்திகள்
காவிரி விவகாரத்துக்கு பொறுப்பேற்று சித்தராமையா பதவி விலக வேண்டும்
தேசிய செய்திகள்

காவிரி விவகாரத்துக்கு பொறுப்பேற்று சித்தராமையா பதவி விலக வேண்டும்

தினத்தந்தி
|
5 Oct 2023 12:15 AM IST

காவிரி விவகாரத்துக்கு பொறுப்பேற்று சித்தராமையா பதவி விலக வேண்டும் என்று பா.ஜனதாவைச் சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரி சதானந்தகவுடா வலியுறுத்தி உள்ளார்.

கோலார்

சதானந்தகவுடா

முன்னாள் முதல்-மந்திரியும், பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான சதானந்தகவுடா நேற்று கோலாருக்கு வந்தார். அவர் கோலாரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கோலாரில் நில ஆக்கிரமிப்பு விவகாரத்தில் விவசாயிகளுக்கு அநீதி ஏற்பட்டுள்ளது. இதை பா.ஜனதா மட்டுமே கண்டித்து வருகிறது. ஆட்சியாளர்களுக்கு எதிராக பா.ஜனதா குரல் கொடுத்து வருகிறது.

வளர்ச்சிப்பணி நடக்கவில்லை

இந்த விவகாரத்தில் பா.ஜனதா எம்.பி.க்கு ஏற்பட்ட அவமானம் இந்த நாட்டுக்கு ஏற்பட்ட அவமானமாகும். நாட்டில் ஜனநாயகம் இல்லை. பா.ஜனதாவினரை போலீசாரும், அரசு அதிகாரிகளும் ஏளனமாக நடத்தி உள்ளனர்.

ஆனால் யாரும் இதுபற்றி பேசவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கவில்லை. முதல்-மந்திரி சித்தராமையா எந்த அடிப்படையில் ஆட்சி நடத்துகிறார் என்று தெரியவில்லை.

மாநிலத்தில் எந்தவொரு வளர்ச்சிப் பணியும் நடைபெறவில்லை. காங்கிரஸ் கட்சியினரே தற்போது சித்தராமையாவுக்கு எதிராக திரும்பி உள்ளனர்.

சித்தராமையா தனது சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை மட்டும் பணியில் அமர்த்தி உள்ளார். இதை கர்நாடக மக்கள் பொருத்துக் கொள்ள மாட்டார்கள்.

ஆட்சி தோல்வி...

அவர்களால் சகித்துக் கொள்ள முடியாது. சித்தராமையாவின் ஆட்சி நிர்வாகம் தோல்வி அடைந்துவிட்டது. சிவமொக்காவில் நடந்த கலவரம் சித்தராமையாவின் ஆட்சி தோல்வி அடைந்ததற்கு ஒரு எடுத்துக்காட்டு.

காவிரி விவகாரம், சிவமொக்கா கலவரம், வளர்ச்சிப் பணிகள் நடைபெறாதது என அனைத்து விஷயங்களுக்கும் பொறுப்பேற்று சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் பதவி விலக வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்

மேலும் செய்திகள்