< Back
தேசிய செய்திகள்
பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க வேண்டும்; உலக சுற்றுச்சூழல் தின விழாவில் முதல்-மந்திரி சித்தராமையா பேச்சு
தேசிய செய்திகள்

பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க வேண்டும்; உலக சுற்றுச்சூழல் தின விழாவில் முதல்-மந்திரி சித்தராமையா பேச்சு

தினத்தந்தி
|
6 Jun 2023 2:29 AM IST

பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க வேண்டும் என்று உலக சுற்றுச்சூழல் தின விழாவில் முதல்-மந்திரி சித்தராமையா பேசினார்.

பெங்களூரு:

பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க வேண்டும் என்று உலக சுற்றுச்சூழல் தின விழாவில் முதல்-மந்திரி சித்தராமையா பேசினார்.

நமது கடமை

கர்நாடக அரசின் வனம்-சுற்றுச்சூழல் துறை சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழா பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி சித்தராமையா கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்து பேசியதாவது:-

இயற்கையுடன் மனிதர்கள் வாழ வேண்டும். காடுகள் நன்றாக இருந்தால், நல்ல மழை கிடைக்கும். மழை பெய்தால் விவசாயம் நன்றாக நடைபெறும்.

இதன் மூலம் மனிதர்களின் வாழ்க்கை நல்ல முறையில் நடைபெறும். நாம் இயற்கையை, இந்த பூமியை நேசிக்க வேண்டும். இது நமது கடமை என்று கருத வேண்டும். சுற்றுச்சூழல் நன்றாக இருந்தால் நாம் சுகாதாரமான சூழலில் வாழ முடியும்.

இயற்கைக்கு நல்லது

சுற்றுச்சூழலின் அவசியம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. நமது சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும். இயற்கையும், பூமியும் பாதுகாப்பாக இருந்தால் தான் மனித வாழ்க்கை நன்றாக, ஆரோக்கியமாக இருக்கும். நாம் அடிக்கடி இயற்கை பேரிடரால் பாதிக்கப்படுகிறோம்.

இயற்கையில் குறிப்பிடத்தக்க அளவில் மாற்றங்கள் நிகழ்வை நாம் பார்த்து கொண்டிருக்கிறோம். இயற்கையால் ஏற்படும் எதிர்மறையான நிகழ்வுகளை நாம் தடுக்க வேண்டியது அவசியம். கடந்த 2016-ம் ஆண்டு நான் முதல்-மந்திரியாக இருந்தபோது, பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டது. தொழில் நிறுவனங்களின் கழிவுகள், பிளாஸ்டிக் பயன்பாடு, காடுகளை அழிப்பது போன்றவற்றை தடுக்க வேண்டும். நீரை இயற்கைக்கு உட்பட்டு பயன்படுத்தினால் நமக்கும், இயற்கைக்கும் நல்லது.

பலனை கொடுக்கும்

குழந்தைகளிடம் இயற்கையை காக்கும் மனநிலை வந்தால் அது அடுத்த தலைமுறையினருக்கு பலனை கொடுக்கும். நாம் என்ன செய்கிறோமோ அதை தான் குழந்தைகள் கற்கிறார்கள். குழந்தைகளிடம் நாம் நல்ல விஷயங்களை விதைக்க வேண்டும். நல்ல விஷயங்களை பின்பற்றி நாம் வாழ்க்கையை நடத்தினால் அடுத்து வரும் தலைமுறைக்கு பயன் மற்றும் வழிகாட்டுதல் கிடைக்கும்.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.

இந்த விழாவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பாக செயல்பட்டதற்காக தென்மண்டலத்தை சேர்ந்த மஞ்சுநாத், மலைநாடு பகுதியை சேர்ந்த சுபாஷ் சந்திரன், வடக்கு மண்டலத்தை சேர்ந்த எம்.ஆர்.தேசாய் ஆகியோருக்கு கர்நாடக மாநில சுற்றுச்சூழல் விருது வழங்கப்பட்டது. அமைப்புகள் பிரிவில் பெங்களூரு கித்வாய் நினைவு காந்தி அமைப்பு, மலைநாடு பகுதியில் தேவிரம்மா வனசிரி அறக்கட்டளை, வடக்கு மண்டலத்தில் வனசிரி அறக்கட்டளை ஆகிய அமைப்புகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

மேலும் செய்திகள்