காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் கோலாரில் உயர் பன்னோக்கு ஆஸ்பத்திரி; சித்தராமையா அறிவிப்பு
|காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் கோலாரில் உயர் பன்னோக்கு ஆஸ்பத்திரி அமைக்கப்படும் என்று சித்தராமையா அறிவித்துள்ளார்.
கோலார் தங்கவயல்:
காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் கோலாரில் உயர் பன்னோக்கு ஆஸ்பத்திரி அமைக்கப்படும் என்று சித்தராமையா அறிவித்துள்ளார்.
அலை வீசுகிறது
காங்கிரஸ் கட்சியின் மக்கள் குரல் நிகழ்ச்சி கோலாரில் நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா கலந்து கொண்டு பேசியதாவது:-
கர்நாடகத்தில் காங்கிரசுக்கு ஆதரவான அலை வீசுகிறது. இதனால் பயந்து போயுள்ள பா.ஜனதாவினர், பிரதமர் மோடியை வாரம் ஒரு முறை கா்நாடகத்திற்கு அழைத்து வருகிறார்கள். பா.ஜனதாவின் முதலீடு மோடி. மோடியை வைத்து மீண்டும் ஆட்சியை பிடித்துவிடலாம் என்று பா.ஜனதாவினர் கனவில் உள்ளனர். சூரியன் கிழக்கில் உதிப்பது எவ்வளவு உண்மையோ, அதே போல் கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வருவதும் உண்மையே.
ஊழல் தாண்டவமாடுகிறது
நாங்கள் இதுவரை 12 மாவட்டங்களில் மக்கள் குரல் நிகழ்ச்சியை நடத்தி முடித்துள்ளோம். நாங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் நல்ல வரவேற்பு அளிக்கிறார்கள். பா.ஜனதா ஆட்சியை போன்ற ஒரு ஊழல் அரசை கர்நாடக மக்கள் இதுவரை பார்த்தது இல்லை. நானும் லஞ்சம் வாங்க மாட்டேன், வாங்குகிறவர்களையும் விட மாட்டேன் என்று பிரதமர் மோடி கூறினார். ஆனால் கர்நாடகத்தில் நடைபெற்ற ஊழல்களை பிரதமர் மோடி கைகளை கட்டி கொண்டு வேடிக்கை பார்த்துள்ளார்.
சட்டசபையில் இந்த அரசின் ஊழல்களை கிளப்ப நாங்கள் 3 முறை முயற்சி செய்தோம். ஆனால் அதற்கு அனுமதி அளிக்கவில்லை. பணி நியமனம், பணி இடமாறுதல், பதவி உயர்வு, டெண்டர் போன்ற எல்லாவற்றிலும் ஊழல் தாண்டவமாடுகிறது. விதான சவுதாவின் சுவர்கள் கூட லஞ்சம், லஞ்சம் என்று சொல்கிறது. நான் 5 ஆண்டுகள் முதல்-மந்திரியாக இருந்தபோது, ஒரு பைசா கூட லஞ்சம் வாங்கவில்லை. ஒருவேளை நான் லஞ்சம் வாங்கியதை யாராவது நிரூபித்தால் அரசியலை விட்டு விலகி கொள்கிறேன்.
ரூ.14 லட்சம் கோடி தள்ளுபடி
ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக பிரதமர் மோடி உறுதியளித்தார். இந்த 8 ஆண்டுகளில் 16 கோடி வேலைகள் உருவாகி இருக்க வேண்டும். ஆனால் வேலை வாய்ப்புகள் உருவாகவில்லை. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களை மோடி விற்றுவிட்டார். ஜனதா தளம் (எஸ்) ஒரு சந்தர்ப்பவாத கட்சி. அவர்கள் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களுடன் சென்று விடுவார்கள்.
மத்திய அரசு, அம்பானி, அதானி போன்ற முதலாளிகளின் ரூ.14 லட்சம் கோடியை தள்ளுபடி செய்துள்ளது. பிரதமர் மோடி ஏழைகளின் கடனை தள்ளுபடி செய்ய மாட்டார். மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது, ரூ.78 ஆயிரம் கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்தார். நான் முதல்-மந்திரியாக இருந்தபோது ரூ.8,165 கோடி தள்ளுபடி செய்து விவசாயிகளின் கண்ணீரை துடைத்தேன்.
உயர் பன்னோக்கு ஆஸ்பத்திரி
காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் கோலாரில் உயர் பன்னோக்கு ஆஸ்பத்திரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். வீடுகளுக்கு இலவச மின்சாரம், குடும்ப தலைவிகளுக்கு மாதம் தலா ரூ.2 ஆயிரம் வழங்குவதாக நாங்கள் ஏற்கனவே அறிவித்துள்ளோம்.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.