நிவாரண பணிகளுக்கு மத்திய அரசிடம் உதவி கேட்கப்படும்; முதல்-மந்திரி சித்தராமையா பேட்டி
|மத்திய அரசிடம் நிவாரண பணிகளுக்கு மட்டும் உதவி கேட்கப்படும் என்று முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.
பெங்களூரு:
கர்நாடகத்தில் வறட்சி குறித்து முடிவு செய்ய வருவாய்த்துறை மந்திரி கிருஷ்ண பைரேகவுடா தலைமையில் மந்திரிசபை துணை குழு அமைக்கப்பட்டது. அந்த குழு நேற்று முன்தினம் கூடி ஆலோசனை நடத்தியது. இதில் 195 தாலுகாக்கள் வறட்சி பகுதிகள் என்று அறிவிக்க முடிவு செய்தது. இதுகுறித்து முதல்-மந்திரிக்கு தெரிவிக்கப்படும் என்று அந்த குழு கூறியது. இந்த நிலையில் முதல்-மந்திரி சித்தராமையா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
தேசிய இயற்கை பேரிடர் விதிமுறைகளின்படி கர்நாடகத்தில் 195 தாலுகாக்கள் வறட்சி பகுதிகள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அரசுக்கு தகவல் தெரிவிக்கப்படும். இந்த வறட்சி பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ள தேவையான உதவிகளை செய்யுமாறு மத்திய அரசிடம் கேட்போம். காவிரி விவகாரத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி எதிர்க்கட்சி தலைவர்களின் நம்பிக்கையும் பெற்றுள்ளோம்.
நீர்ப்பாசனத்துறையை நிர்வகிக்கும் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் டெல்லி சென்றுள்ளார். அங்கு சட்ட நிபுணர்களை சந்தித்து அடுத்தக்கட்டமாக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசிப்பார். சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்படும். அங்கு கர்நாடகத்தின் உண்மை நிலை என்ன என்பது தெரிவிக்கப்படும்.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.