< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்

சித்தராமையாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கும் நடிகர் விஜய் சேதுபதி

தினத்தந்தி
|
29 Nov 2022 6:45 PM GMT

கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பெங்களுரு:

கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு

பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்கும் பழக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. மறைந்த தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா உள்பட சில அரசியல் பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக வந்துள்ளது.

அந்த வரிசையில் தற்போது கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியும், கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சித்தராமையாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க உள்ளனர்.

சித்தராமையா

தற்போது சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக உள்ள சித்தராமையா, மக்கள் செல்வாக்குடன் திகழும் அரசியல்வாதி. கூட்டங்களில் அவரது பேச்சை கேட்கவும், செல்லும் இடங்களில் அவரை நேரில் பார்க்கவும் ஒரு பெருங்கூட்டம் இருக்கிறது. அவரது நகைச்சுவை, கேலி, கிண்டல், நக்கல், நையாண்டித்தனத்துடன் கூடிய அவரது பேச்சை காங்கிரசார் மட்டுமின்றி பிற கட்சியினரும் ரசித்து கேட்பது உண்டு. அரசியலில் தனக்கென்று தனி பாணியை வைத்துள்ள சித்தராமையாவின் சொந்த ஊர் மைசூரு மாவட்டம் வருணா அருகே உள்ள சித்தராமய்யனஹுண்டி கிராமம் ஆகும். வறுமை காரணமாக சிறுவயதில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த சித்தராமையா, பள்ளிக்கும் செல்லாமல் இருந்தார்.

அரசியல் பயணம்

இதைப்பார்த்த ஒரு ஆசிரியர், சித்தராமையாவை நேரில் அழைத்து நேரடியாக 5-ம் வகுப்பில் சேர்த்து படிக்க வைத்தார். அப்படி தனது கல்வி பயணத்தை தொடங்கிய சித்தராமையா படிப்படியாக உயர்ந்து சட்டம் பயின்றார். வக்கீலாக தனது வாழ்க்கையை தொடங்கிய அவர் பின்னர் சமூக நீதிக்கட்சியில் சேர்ந்து அரசியல் பயணத்தை தொடங்கினார். பின்னர் ஜனதா தளம்(எஸ்) கட்சியில் சேர்ந்து தேர்தலில் வெற்றிபெற்று எம்.எல்.ஏ.வாக உயர்ந்தார். மந்திரியாகவும் பணியாற்றினார்.

பின்னர் அக்கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் காங்கிரசில் சேர்ந்து தேர்தலில் வெற்றிபெற்று முதல்-மந்திரியாக பணியாற்றினார். தேவராஜ் அர்சுக்கு பிறகு கர்நாடகத்தில் 5 ஆண்டுகள் முழுமையாக முதல்-மந்திரியாக ஆட்சி புரிந்தவர் சித்தராமையா தான். அடுத்து வரும் கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றால், மீண்டும் முதல்-மந்திரி பதவியை சித்தராமையாவுக்கு வழங்க கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வாழ்க்கை வரலாறு

தற்போது அவரது வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க கன்னட திரைஉலகினர் முடிவு செய்துள்ளனர். அதில் சித்தராமையாவின் கதாப்பாத்திரத்தில் நடிக்க முன்னணி நடிகர் விஜய் சேதுபதி ஒப்புக்கொண்டு இருப்பதாகவும், அதற்கான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ரூ.50 கோடிக்கும் அதிகமான செலவில் தயாராக உள்ள இந்த திரைப்படத்தை கங்காவதி ஹயாத் பீர் ஷாப் தலைமையில் எம்.எஸ். கிரியேஷன்ஸ் தயாரிக்க இருப்பதாகவும், இதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை முன்னாள் மந்திரிகள் சிவராஜ் தங்கடகி, ஜமீர் அகமது கான் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.

சட்டசபை தேர்தல்

தனது வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்கவும், அதில் விஜய் சேதுபதி நடிக்கவும் சித்தராமையா சம்மதம் தெரிவித்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து முன்னாள் மந்திரி சிவராஜ் தங்கடகி கூறும்போது, "சித்தராமையாவின் வாழ்க்கை வரலாறு குறித்து படம் எடுக்க முடிவு செய்துள்ளோம். இதுகுறித்து ஒரு திரைப்பட இயக்குனர் என்னை வந்து சந்தித்து தனது விருப்பத்தை கூறினார். நான் சித்தராமையாவை நேரில் சந்தித்து இதுபற்றி கேட்டேன். அவர் தற்போது சட்டசபை தேர்தல் வருவதால் அதுபற்றி பின்னர் பேசுவதாக கூறினார்'' என்றார்.

நடிகர் விஜய் சேதுபதி

இதுகுறித்து சித்தராமையாவிடம் நிருபர்கள் கேட்டபோது அதற்கு அவர், "எனது வாழ்க்கை வரலாறு குறித்து படம் எடுக்க விரும்புவதாக சிலர் என்னை வந்து சந்தித்தனர். அதில் நான் நடிக்கவில்லை'' என்றார்.

சித்தராமையா மக்கள் செல்வாக்குடன் விளங்கும் மாபெரும் தலைவர். அதேபோல் தமிழ் நடிகர்களில் தனக்கென ஒரு சிறப்பிடத்தை பிடித்து மக்கள் செல்வாக்கு பெற்று விளங்குபவர் நடிகர் விஜய்சேதுபதி. இருவருக்கும் உள்ள ஒரு ஒற்றுமை, உள்ளதை உள்ளபடி நெற்றியில் அடித்தாற்போல் நேரடியாக கூறுவதுதான். மேலும் மூடநம்பிக்கைகளுக்கும் இருவரும் எதிரானவர்கள் என்பதால் சித்தராமையா கதாப்பாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் செய்திகள்