< Back
தேசிய செய்திகள்
வழக்கு போட்டுவிடுவேன் என எஸ்.ஐ மிரட்டல்... அச்சத்தில் ஆசிரியர் தற்கொலைகோப்புப்படம்
தேசிய செய்திகள்

வழக்கு போட்டுவிடுவேன் என எஸ்.ஐ மிரட்டல்... அச்சத்தில் ஆசிரியர் தற்கொலை

தினத்தந்தி
|
12 Jan 2024 1:50 PM IST

தற்கொலை செய்வதற்கு முன்பு குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்.

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் மஹோபா மாவட்டத்தில் உள்ள ஸ்ரீநகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திர பிரதாப் சிங் (வயது 28). இவர் ஸ்ரீநகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியின் உரிமையாளர் ஆவார். ராஜேந்திர பிரதாப் சிங் நேற்று மதியம் ஒரு வேலையாக அருகில் உள்ள அட்ராமாப் கிராமத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கும் மதுபான ஒப்பந்ததாரர் கரண் ராஜ்புத் என்பவருக்கும் இடையே சில பிரச்சினை காரணமாக மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த மோதல் தொடர்பாக கரண் ராஜ்புத் ஸ்ரீநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், ராஜேந்திர பிரதாப் சிங் தன்னை தாக்கி பொருட்களை கொள்ளையடித்து சென்றாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஸ்ரீநகர் போலீஸ் நிலையத்தின் எஸ்.ஐ தேவேந்திர பாண்டே இந்த புகாரை முழுமையாக விசாரிக்காமல் நேற்று ராஜேந்திர பிரதாப் சிங்கின் வீட்டிற்கு சென்று அவரை அவதூறாக பேசியுள்ளார். மேலும் தன்னுடன் போலீஸ் நிலையத்திற்கு வருமாறு வற்புறுத்தியும், வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்து விடுவதாகவும் எஸ்.ஐ மிரட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த ராஜேந்திர பிரதாப் சிங் தனது வயலில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை செய்வதற்கு முன்பு குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குடும்பத்தினர் ராஜேந்திர பிரதாப் சிங் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். இறந்து கிடந்த ராஜேந்திர பிரதாப் சிங்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் போலீஸ் நிலையத்திற்கு முன்பு திரண்டு எஸ்.ஐ தேவேந்திர பாண்டேக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் நடத்தினார். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. பின்னர் உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து கிராம மக்களை சமாதானம் செய்து எஸ்.ஐ. மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தேவேந்திர பாண்டேவை விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்