< Back
தேசிய செய்திகள்
ஷ்ரத்தா வாக்கர் படுகொலை... டேட்டிங் ஆப்பில் இருந்து விலகி ஓடும் இளம்பெண்கள்
தேசிய செய்திகள்

ஷ்ரத்தா வாக்கர் படுகொலை... டேட்டிங் ஆப்பில் இருந்து விலகி ஓடும் இளம்பெண்கள்

தினத்தந்தி
|
28 Nov 2022 1:55 PM IST

டெல்லியில் ஷ்ரத்தா வாக்கர் கொடூர கொலை எதிரொலியாக டேட்டிங் ஆப், மேட்ரிமோனியில் இருந்து இளம்பெண்கள் பலர் விலகி ஓடுகின்றனர்.


புதுடெல்லி,


டெல்லியில் இளம் காதல் ஜோடிகளாக திரிந்த 28 வயது ஷ்ரத்தா வாக்கர் மற்றும் அவரது காதலன் அப்தாப் அமீன் பூனாவல்லா இடையேயான உறவில் திடீரென விரிசல் ஏற்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக பூசல் நீடித்த நிலையில், மே மாதம் அதன் கோர முகம் வெளிப்பட்டது.

தொடர்ந்து திருமணத்திற்கு வாக்கர் வற்புறுத்தியது அப்தாப்புக்கு எரிச்சல் உண்டு பண்ணியுள்ளது. இதனால், பல முறை கொலை முயற்சியில் ஈடுபட்டும் அது தோல்வியில் முடிந்து உள்ளது. இந்த நிலையில், மே மாதத்தில் வாக்கரை கொலை செய்து, உடலை பிரிட்ஜில் மறைத்து வைத்துள்ளார். அதன்பின்பு, 35 துண்டுகளாக்கி டெல்லியின் பல பகுதிகளில் வீசி சென்றுள்ளார்.

சமீப நாட்களாக இதுபோன்ற கொடூர கொலைகள் அதிகரித்து வருகின்றன. உத்தர பிரதேசத்திலும், இதுபோன்று காதலி ஒருவர் காதலனால் கொல்லப்பட்டு துண்டுகளாக வீசப்பட்ட சம்பவம் நாட்டில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

வங்காளதேசத்தில் கூட திருமணம் முடிந்து அதனை மறைத்தது அறிந்து, கேள்வி கேட்டதற்காக இந்து பெண் ஒருவர் சமீபத்தில் கொடூர கொலை செய்யப்பட்டு, துண்டுகளாக்கப்பட்ட சம்பவம் மற்றொரு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

டெல்லி சம்பவத்தில் வாக்கர், அப்தாப் இருவரும் முதன்முதலாக டேட்டிங் ஆப் வழியே அறிமுகம் ஆகியுள்ளனர். பம்பிள் என்ற டேட்டிங் ஆப்பில் இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து காதலை பரிமாறி கொண்டனர். தற்போது, வாக்கரின் படுகொலையால் பெண்கள் பலரும் அச்சத்தில் உள்ளனர்.

இதனால், மீண்டும் ஆன்லைன் டேட்டிங் ஆப்பை சமூக கண்காணிப்பின் கீழ் கொண்டு வரவேண்டும் என குரல்கள் ஒலிக்கின்றன. வாக்கரின் கொடூர கொலையால் சமீப காலங்களாக டேட்டிங் மற்றும் மேட்ரிமோனி ஆப்களை பயன்படுத்தி வரும் இந்திய இளம்பெண்கள் பலர் பயத்தில் உறைந்து போயுள்ளனர்.

இதனால் ஏற்படும் சமூக தொடர்புகளால் பணமோசடி, பாலியல் ரீதியான துன்புறுத்தல், பணம் கேட்டு மிரட்டல் போன்ற சம்பவங்கள் ஆண்களால், பெண்களுக்கு அதிகம் ஏற்பட்டு வருகிறது என கூறப்படுகிறது.

தொடக்கத்தில் 10 ஆண்டுகளுக்கு முன் பல பாதுகாப்பு அம்சங்களுடன் என்ற பெயரில், அறிமுகப்படுத்தப்பட்ட டின்டர் ஆப் மக்களிடையே வரவேற்பை பெற்றது. எனினும், குற்ற செயல்களில் ஈடுபடும் சிலரால் இதன் தவறான பயன்பாடும் அதிகரித்தது என்பதும் மறுக்க முடியாதது.

கடந்த காலங்களில் டின்டர், பம்பிள் மற்றும் ஹின்ஞ் போன்ற டேட்டிங் ஆப்பை பயன்படுத்தி வந்த பெண்கள் பலரும் தங்களுக்கு ஏற்பட்ட, பணம் கேட்டு மிரட்டல், பாலியல் மிரட்டல், துன்புறுத்தல் ஆகிய தங்களுக்கு ஏற்பட்ட சோக சம்பவங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

வாக்கர் சம்பவத்திற்கு பின்னர், தனியார் மேட்ரிமோனி ஆப்பில் ஆடவர் ஒருவருடன் உரையாடலில் ஈடுபட்டு வந்த டெல்லியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அதனை முற்றிலும் நிறுத்தி விட்டார். ஆப்பையும் நீக்கி விட்டார்.

இதேபோன்று, வேலைக்கு சென்று வரும் 30 வயது பெண் ஒருவர் டிண்டர் (டேட்டிங் ஆப்) ஆப்பை பயன்படுத்துவதற்கு பதில் 10 ஆண்டுகளாக மனஅழுத்தத்தில் கூட இருந்து விடுவேன் என கூறியுள்ளார்.

சைபர் குற்றத்துடன் தொடர்புடைய மனித கடத்தலில் பெண்கள் அதிகம் சிக்குவதும் 2-ம் மற்றும் 3-ம் நிலையிலுள்ள நகரங்களில் அதிகரித்து காணப்படுகிறது என சைபர்பீஸ் பவுண்டேசன் என்ற அமைப்பு தெரிவித்து உள்ளது.

காதல் முறிவு, பாலியல் உறவில் பிரிவு, தனிமை உள்ளிட்டவற்றில் சிக்கி துன்புறும் பெண்கள், போலியான பெயரிலான சிறந்த வாழ்க்கை அல்லது வேலைவாய்ப்பு சந்தர்ப்பங்கள் என கூறி ஈர்க்கும் இதுபோன்ற ஆட்களிடம் எளிதில் சிக்கி கொள்கின்றனர். அதன்பின்பு, அவர்களின் வாழ்க்கை கேள்விக்குள்ளாகிறது என்று சைபர் குற்ற புலனாய்வு துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.

மேலும் செய்திகள்