< Back
தேசிய செய்திகள்
குஜராத் பால விபத்தில் சிக்கி, தப்பி பிழைத்து சிகிச்சை பெறுபவரின் அதிர்ச்சி பேட்டி
தேசிய செய்திகள்

குஜராத் பால விபத்தில் சிக்கி, தப்பி பிழைத்து சிகிச்சை பெறுபவரின் அதிர்ச்சி பேட்டி

தினத்தந்தி
|
31 Oct 2022 5:13 PM IST

குஜராத் பால விபத்தில் நண்பருடன் சென்று சிக்கி, தப்பி பிழைத்த நபர், நடந்த அதிர்ச்சியான சம்பவம் பற்றி பேட்டி அளித்து உள்ளார்.



மோர்பி,


குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே அமைந்த 100 ஆண்டுகள் பழமையான தொங்கு பாலம் 8 மாத கால பராமரிப்பு பணிக்கு பின்பு, கடந்த 26-ந்தேதி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டது.

ஆனால், 5 நாட்களில் பாலம் திடீரென நேற்று மாலை இடிந்து விழுந்து பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. பால விபத்தில் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், 177 பேர் மீட்கப்பட்டும் உள்ளனர். சிலர் சிகிச்சையில் உள்ளனர். தொடர்ந்து மீட்பு, நிவாரண பணிகள் நடந்து வருகின்றன.

இந்த துயர சம்பவத்திற்கு ரஷியா, அமெரிக்கா, சவுதி அரேபியா, நேபாளம், சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் சார்பில் இரங்கல்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், கெவாடியா நகரின் ஏக்தா நகர் பகுதியில் நடந்த சர்தார் வல்லபாய் பட்டேலின் 147-வது பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பேசும்போது, மோர்பி பால விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் தொய்வு எதுவும் இல்லை என கூறினார்.

குஜராத் அரசு நேற்றைய தினத்தில் இருந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. மாநில அரசுக்கு மத்திய அரசும் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. சம்பவம் பற்றி விசாரிக்க குஜராத் அரசு குழு ஒன்றை அமைத்து உள்ளது. ஒரு புறம் வேதனையுடன் கூடிய மனதுடன் இருந்தபோதும், மறுபுறம் கடமையை செய்வதற்கான பாதை காத்திருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த துயர சம்பவத்தில் சிக்கி, தப்பி பிழைத்தவர் அஷ்வின் மெஹ்ரா. அவர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் பால விபத்து பற்றி செய்தியாளர்களிடம் கூறும்போது, மாலை 6.30 மணி இருக்கும்.

பாலத்தின் கயிற்றை சில குறும்புக்கார குழந்தைகள் 20 பேர் வரை பிடித்து இழுத்தும், ஆட்டியபடியும் இருந்தனர். பாலம் இடிந்து விழுவதற்கு முன்பு 3 முறை அதில் இருந்து ஒரு சத்தம் வெளிவந்தது என கூறியுள்ளார்.

இந்த விபத்தில் இருந்து எப்படி தப்பி வந்தீர்கள் என்று கேட்டதற்கு, அருகே இருந்த மரக்கிளைகளை பற்றி பிடித்து கொண்டேன். அதனால், தப்பி விட்டேன். என்னுடன் வந்த நண்பர் பிரகாஷ் என்பவரும் தப்பித்து விட்டார் என கூறியுள்ளார்.

அஷ்வினுக்கு காலிலும், முதுகிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டு உள்ளன. அவருக்கு அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாலம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி காயமடைந்த அனைவரும் அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்