குடியரசு தின ரெய்டில் சிக்கிய 2 பேர் அதிர்ச்சி வாக்குமூலம்; 3 துண்டுகளான நபரின் உடல் மீட்பு
|குடியரசு தின ரெய்டில் சிக்கிய பயங்கரவாத செயல்களில் தொடர்புடைய 2 பேர் அளித்த வாக்குமூலம் அடிப்படையில் 3 துண்டுகளான நபரின் உடலை டெல்லி போலீசார் மீட்டு உள்ளனர்.
புதுடெல்லி,
நாட்டில் வருகிற 26-ந்தேதி குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு டெல்லியில் போலீசார் தீவிர சோதனை நடத்தி, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், டெல்லி போலீசார் நடத்திய ரெய்டில் ஜெகஜீத் சிங் என்ற ஜக்கா மற்றும் நவுசத் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். பல்ஸ்வா பால் பண்ணை பகுதியருகே பதுங்கி இருந்த அவர்களை பிடித்து விசாரித்ததில் அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன.
அவர்களுக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் உள்ள தொடர்பும், பல குற்ற செயல்களில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்கள் அளித்த தகவலின் பேரில், டெல்லியின் வடக்கு பகுதியான பல்ஸ்வா பகுதியில் காலி மனையில் சோதனையிட்டதில் உடல் ஒன்றை கைப்பற்றினர்.
கழிவுநீர் ஓடையில் வீசப்பட்ட, அடையாளம் தெரியாத, 3 துண்டுகளாக இருந்த உடல் ஒன்றை போலீசார் மீட்டு உள்ளனர். அவரை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது என போலீசார் கூறியுள்ளனர்.
அவர்கள் இருவரும் தங்கியுள்ள வாடகை கட்டிடத்தில் இருந்து 2 கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்டன. 3 கைத்துப்பாக்கிகள், 22 வெடிக்க தயாரான நிலையிலுள்ள தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
ஜக்காவுக்கு கனடாவை சேர்ந்த காலிஸ்தானி பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு உள்ளது என சந்தேகிக்கப்படுகிறது. ஹர்கத்-உல்-அன்சார் என்ற பயங்கரவாத அமைப்புடன் நவுசத்துக்கு தொடர்பு உள்ளது என போலீசார் கூறியுள்ளனர். தொடர்ந்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.