< Back
தேசிய செய்திகள்
குஜராத்தில் அதிர்ச்சி; பைக்கில் சென்றவரை மோதி காரில் 12 கி.மீ. இழுத்து சென்ற நபர் கைது
தேசிய செய்திகள்

குஜராத்தில் அதிர்ச்சி; பைக்கில் சென்றவரை மோதி காரில் 12 கி.மீ. இழுத்து சென்ற நபர் கைது

தினத்தந்தி
|
28 Jan 2023 8:41 AM IST

குஜராத்தில் பைக்கில் மனைவியுடன் பயணித்த நபர் விபத்தில் காரில் சிக்கி 12 கி.மீ. இழுத்து செல்லப்பட்டதில் உயிரிழந்து உள்ளார்.



சூரத்,


டெல்லியில் கஞ்சவாலா நகரில் சுல்தான்புரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ஸ்கூட்டியில் தோழியுடன் சென்ற அஞ்சலி சிங் (வயது 20) என்ற இளம்பெண், புது வருட தினத்தன்று அதிகாலையில் விபத்தில் சிக்கி, காரில் 12 கி.மீ. தொலைவுக்கு இழுத்து செல்லப்பட்டு உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி இருந்தது.

இதனையொட்டி உணவு வினியோகம் செய்யும் நபர் புது வருட தினத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரும் இதேபோன்று, விபத்தில் சிக்கி காரில் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு இழுத்து செல்லப்பட்ட மற்றொரு சம்பவமும் அடுத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், ஒரு மாதத்திற்குள் அடுத்தொரு அதிர்ச்சி சம்பவம் நடந்து உள்ளது. குஜராத்தில் சூரத் புறநகர் பகுதியில் பல்சானா என்ற இடத்தில் தனது மனைவியுடன் சாகர் பாட்டீல் என்பவர் பைக்கில் சென்று கொண்டு இருந்து உள்ளார்.

இந்நிலையில், அவரது வாகனம் மீது கார் ஒன்று விபத்து ஏற்படுத்தி உள்ளது. இதன்பின் 12 கி.மீ. தொலைவுக்கு அவர் இழுத்து செல்லப்பட்டார். சம்பவ பகுதியில் அந்நபரின் மனைவி கிடந்து உள்ளார்.

இந்த சம்பவத்தில் சாகர் பாட்டீல் உயிரிழந்து உள்ளார். இதன்பின்பு, அந்த பகுதியில் இருந்து, விபத்து ஏற்படுத்திய நபர் தப்பியோடி விட்டார். போலீசார் தேடுவது பற்றி அறிந்து, மும்பை மற்றும் ராஜஸ்தான் என வெவ்வேறு இடங்களுக்கு தப்பியுள்ளார்.

இறுதியில் சூரத் நகருக்கு செல்கிறார் என்ற தகவல் அறிந்து, காம்ரெஜ் சுங்க சாவடியில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுபற்றி போலீசார் கூறும்போது, பைரன் லாடுமோர் அஹிர் என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். கட்டுமான தொழிலதிபராக உள்ளார் என தெரிவித்து உள்ளனர்.

விபத்தில், அந்த நபர் சிக்கியது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும், விபத்திற்கு பின்னர், பயத்தில் வெவ்வேறு இடங்களுக்கு தப்பி செல்ல முயற்சித்தேன் என்றும் கைது செய்யப்பட்ட அஹிர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்