< Back
தேசிய செய்திகள்
சிவமொக்கா; வீட்டில் தீப்பிடித்து தம்பதி-மகன் கருகி சாவு
தேசிய செய்திகள்

சிவமொக்கா; வீட்டில் தீப்பிடித்து தம்பதி-மகன் கருகி சாவு

தினத்தந்தி
|
9 Oct 2023 12:00 AM IST

சிவமொக்காவில் வீட்டில் தீப்பிடித்து தம்பதி, மகன் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

சிவமொக்கா-

சிவமொக்காவில் வீட்டில் தீப்பிடித்து தம்பதி, மகன் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்கள் தற்கொலை செய்துகொண்டார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வீட்டில் தீப்பிடித்தது

சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளி தாலுகா ஹரளசுரளி கிராமத்தை சேர்ந்தவர் ராகவேந்திரா (வயது 63). இவரது மனைவி நாகரத்னா (55). மகன்கள் ஸ்ரீராம் (30), பரத் (28). ஒசநகர் சாலையில் அரிசி ஆலைக்கு பின்புறம் அவர்களது வீடு அமைந்துள்ளது. இந்த நிலையில் நேற்று காலை அவர்கள் 4 பேரும் வீட்டில் இருந்தனர். அந்த சமயத்தில் திடீரென்று அவர்களது வீட்டில் தீப்பிடித்து எரிந்தது.

இதனால் அவர்கள் 4 பேரும் தீயில் சிக்கி அலறி துடித்தனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டில் பிடித்து எரிந்த தீயை அணைக்க முயன்றனர். ஆனாலும் தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் அவர்களால் அணைக்க முடியவில்லை. இதையடுத்து தீயணைப்பு படையினருக்கும், தீர்த்தஹள்ளி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

3 பேர் கருகி சாவு

அதன்பேரில் போலீசாரும், தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் தீயணைப்பு படையினர் வீட்டில் பிடித்து எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து போராடி அணைத்தனர். ஆனாலும் அதற்குள் ராகவேந்திரா, நாகரத்னா, ஸ்ரீராம் ஆகிய 3 பேரும் தீயில் சிக்கி உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பரத், உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதையடுத்து போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக தீர்த்தஹள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சிவமொக்கா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். பின்னர் போலீசார், உயிரிழந்த 3 பேரின் உடல்களையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலையா?

வீட்டில் தானாக தீப்பிடித்திருக்க சாத்தியமில்லை எனவும், அவர்களாகவே வீட்டுக்கு தீவைத்து தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். ஆனாலும் அவர்கள் தற்கொலை செய்துகொண்டார்களா? அல்லது வீட்டில் தீப்பிடித்ததா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தீ விபத்தில் படுகாயம் அடைந்த பரத் அளிக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் உண்மை தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து தீர்த்தஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் தீர்த்தஹள்ளியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்