< Back
தேசிய செய்திகள்
சிவசேனா-35, சுயேச்சை-7; அசாம் ஓட்டலில் குவிந்த 42 மராட்டிய எம்.எல்.ஏ.க்கள்
தேசிய செய்திகள்

சிவசேனா-35, சுயேச்சை-7; அசாம் ஓட்டலில் குவிந்த 42 மராட்டிய எம்.எல்.ஏ.க்கள்

தினத்தந்தி
|
23 Jun 2022 3:15 PM IST

மராட்டிய அரசில் இருந்து வெளியேற சிவசேனா தயார் என்றும் அதற்கு அனைத்து எம்.எல்.ஏ.க்களும் மும்பை வந்து முதல்-மந்திரியிடம் ஆலோசிக்க வேண்டும் என எம்.பி. சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.



கவுகாத்தி,



மராட்டிய மேல்சபைக்கான தேர்தலில் கட்சி மாறி ஓட்டு போட்டுள்ளனர் என்ற சர்ச்சையால் கடந்த 2 நாட்களாக அடுத்தடுத்த திருப்பங்கள் ஏற்பட்டு உள்ளன. இந்த தேர்தலில் பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. கட்சி மாறி ஓட்டு போட்டது இதற்கு காரணம் என்ற சந்தேகம் நிலவி வருகிறது.

அதற்கேற்ப, சிவசேனா தலைவர்களில் ஒருவரான மற்றும் மராட்டிய அமைச்சரவையில் மந்திரியாக உள்ள ஏக்நாத் ஷிண்டேவை கட்சியால் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவருடன் சேர்ந்து 26 எம்.எல்.ஏ.க்களும் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உள்ளனர் என மராட்டிய அரசியல் வட்டாரம் கூறியது.

அவர்கள் குஜராத்தின் சூரத் நகரில் உள்ள ஓட்டல் ஒன்றுக்கு சென்று விட்டனர் என முதலில் கூறப்பட்டது. இதேபோன்று, 15 சிவசேனா எம்.எல்.ஏ.க்களை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது என அக்கட்சியின் மூத்த தலைவர் மற்றும் எம்.பி.யான சஞ்சய் ராவத்தும் உறுதிப்படுத்தினார்.

இது மராட்டிய அரசியலில் பரபரப்பு ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து, மராட்டிய சட்டசபை துணை சபாநாயகர் நர்ஹாரி ஜிர்வாலை கடந்த 2 தினங்களுக்கு முன் சிவசேனா தலைவர்கள் நேரில் சந்தித்தனர்.

அவர்கள், மராட்டிய சட்டசபை கட்சி தலைவர் பதவியில் இருந்து ஏக்நாத் ஷிண்டேவை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை கடிதம் ஒன்றை அவரிடம் வழங்கினர். ஷிண்டேவுக்கு பதிலாக அஜய் சவுத்ரியை அந்த பதவியில் நியமிக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், மராட்டிய மாநில அமைச்சரவை நேற்று மதியம் ஒரு மணியளவில் கூடும் என்றும் இந்த கூட்டத்தில் அனைத்து மந்திரிகளும் கலந்து கொள்ள வேண்டும் எனவும் இதற்கான அறிவிப்பை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று முன்தினம் இரவு வெளியிடார். ஆனால், நேற்று உத்தவ் தாக்கரேவுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது என தகவல் வெளியானது.

எனினும், கொரோனா விதிகளை மீறி அவர் கட்சியினரை சந்தித்து பேசினார் என்ற மற்றொரு சர்ச்சை எழுந்தது. இதற்கு எதிராக அவர் மீது புகாரும் கொடுக்கப்பட்டது. இந்நிலையில், ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் அசாமின் கவுகாத்தி நகரில் உள்ள ரேடிசன் புளூ ஓட்டலில் ஒன்றாக உள்ளனர்.

மராட்டியத்தில் ஆளும் சிவசேனாவின் 35 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 7 பேர் என மொத்தம் 42 எம்.எல்.ஏ.க்கள் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் ஒன்றாக உள்ள குழு புகைப்படமும் இன்று வெளியாகி உள்ளது.

இதுபற்றி குறிப்பிட்ட எம்.பி. சஞ்சய் ராவத், எம்.எல்.ஏ.க்கள் கவுகாத்தியில் இருந்து தொடர்பு கொள்ள கூடாது. அவர்கள் மும்பைக்கு வந்து முதல்-மந்திரியை சந்தித்து அனைத்து விசயங்களை பற்றி ஆலோசனை மேற்கொள்ள வேண்டும்.

மராட்டிய அரசில் இருந்து வெளியேற வேண்டும் என அனைத்து எம்.எல்.ஏ.க்களும் விரும்பினால், அதற்கு நாங்கள் (சிவசேனா) தயாராக இருக்கிறோம். ஆனால், அதற்கு அவர்கள் மும்பை வரவேண்டும். முதல்-மந்திரியிடம் அதுபற்றி ஆலோசிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்