< Back
தேசிய செய்திகள்
மங்களூரு துறைமுகத்துக்கு கொரோனா பரவலுக்கு பிறகு வந்த முதல் வெளிநாட்டு சுற்றுலா கப்பல்
தேசிய செய்திகள்

மங்களூரு துறைமுகத்துக்கு கொரோனா பரவலுக்கு பிறகு வந்த முதல் வெளிநாட்டு சுற்றுலா கப்பல்

தினத்தந்தி
|
29 Nov 2022 12:15 AM IST

கொரோனா பரவலுக்கு பிறகு மங்களூரு துறைமுகத்துக்கு நேற்று முதல்முறையாக வெளிநாட்டு சொகுசு கப்பல் வந்தது. அந்த கப்பலில் வந்த சுற்றுலா பயணிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மங்களூரு:

கொரோனா பரவலுக்கு பிறகு மங்களூரு துறைமுகத்துக்கு நேற்று முதல்முறையாக வெளிநாட்டு சொகுசு கப்பல் வந்தது. அந்த கப்பலில் வந்த சுற்றுலா பயணிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மங்களூரு துறைமுகம்

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் புதிய துறைமுகம் அமைந்துள்ளது. இந்த துறைமுகத்தில் வெளிநாடு சுற்றுலா கப்பல்கள் அடிக்கடி வந்து சென்றன. ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக எந்த கப்பல்களும் இந்த துறைமுகத்துக்கு வரவில்லை. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டுள்ள நிலையில், மங்களூரு துறைமுகத்துக்கு ஐரோப்பாவில் இருந்து எம்.எஸ். ஐரோப்பா-2 என்ற சுற்றுலா சொகுசு கப்பல் நேற்று காலை வந்தது.

கொரோனா பரவலுக்கு பிறகு முதல் முறையாக சுற்றுலா கப்பல் வந்ததால் மங்களூரு துறைமுக அதிகாரிகள், அப்பகுதி பொதுமக்கள், வியாபாரிகள் என அனைவரும் உற்சாகமும், மகிழ்ச்சியும் அடைந்தனர். அவர்கள் அந்த கப்பலில் வந்த சுற்றுலா பயணிகளை உற்சாகமாக வரவேற்றனர்.

சுற்றுலா பயணிகள்

அவர்களை சிறப்பாக வரவேற்க அங்கு கர்நாடக கிராமிய நாட்டுப்புற கலைஞர்கள் குழுவினர் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தனர். இந்த கப்பலில் 271 சுற்றுலா பயணிகளும், 373 ஊழியர்களும் வந்திருந்தனர். ஐரோப்பாவில் உள்ள மால்டா துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட இந்த கப்பல் கோவா வழியாக நேற்று காலையில் மங்களூரு துறைமுகத்தை வந்தடைந்தது குறிப்பிடத்தக்கது.

பின்னர் கப்பலில் வந்த சுற்றுலா பயணிகள் அனைவருக்கும் கார்கள், பஸ்கள் ஆகியவை ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டு, மங்களூருவில் உள்ள கோவில்கள், முக்கிய பகுதிகள், முந்திரி பருப்பு தொழிற்சாலை, உடுப்பி மாவட்டத்தில் உள்ள கோவில்கள் ஆகியவை சுற்றி காண்பிக்கப்பட்டன. பின்னர் அவர்கள் கப்பலுக்கு திரும்பினர். அதையடுத்து அந்த கப்பல் கொச்சின் துறைமுகத்துக்கு புறப்பட்டு சென்றது.

மேலும் செய்திகள்